< Back
தேசிய செய்திகள்
எனது மனைவி யாருக்கு ரகசிய படங்களை அனுப்பினார் என்பதை ரூபா கூற வேண்டும்; ரோகிணி சிந்தூரியின் கணவர் பேட்டி
தேசிய செய்திகள்

எனது மனைவி யாருக்கு ரகசிய படங்களை அனுப்பினார் என்பதை ரூபா கூற வேண்டும்; ரோகிணி சிந்தூரியின் கணவர் பேட்டி

தினத்தந்தி
|
20 Feb 2023 9:44 PM GMT

எனது மனைவி யாருக்கு ரகசிய புகைப்படங்களை அனுப்பினார் என்பதை ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி யின் கணவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

எனது மனைவி யாருக்கு ரகசிய புகைப்படங்களை அனுப்பினார் என்பதை ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி யின் கணவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரியின் கணவர் சுதீர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

செல்போனை ஹேக் செய்து...

எனது மனைவி ஒரு நேர்மையான அதிகாரி. அவர் மீது தேவையில்லாத, பொய் குற்றச்சாட்டுகளை ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கூறி இருக்கிறார். எனது மனைவியுடன் ஒரே துறையில் ரூபா பணியாற்றுகிறாரா?, அப்படி இருந்தால் கூட குற்றச்சாட்டுகளை கூறலாம். மாநிலத்தில் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு இல்லாத அக்கறை, இவருக்கு ஏன்?. என்ன காரணத்திற்காக எனது மனைவி பற்றி ரூபா வேண்டும்.

ரூபாவுக்கு என்ன தான் பிரச்சினை என்பது தெரியவில்லை. எனது மனைவியின் ரகசிய புகைப்படங்களை எப்படி சமூக வலைதளங்களில் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி வெளியிடலாம். அவர் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால், செல்போனை ஹேக் செய்து, அந்த ரகசிய புகைப்படங்களை எடுத்து வெளியிட்டாரா? என்பது தெரிய வேண்டும். இதுபற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பகிரங்கப்படுத்த வேண்டும்

எனது மனைவி சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ரகசிய புகைப்படங்களை அனுப்பியதாக ரூபா கூறி இருக்கிறார். எந்த அதிகாரிகளுக்கு எனது மனைவி புகைப்படங்களை அனுப்பினார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும். அவர் கன்னடத்தை சேர்ந்தவர் என்றும், நாங்கள் ஆந்திராவை சேர்ந்தவர் என்றும் பேசி வருகிறார். நான் பெங்களூருவிலேயே பிறந்து, பெங்களூருவிலேயே வளர்ந்தவன். நான் கர்நாடகத்தை சேர்ந்தவன். ஆந்திராவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த விவகாரத்தில் தற்போது உயிருடன் இல்லாத டி.கே.ரவி பற்றி பேசக்கூடாது. ஒருவர் இந்த உலகில் இல்லாத போது, அவரை பற்றி பேசுவது தவறு. ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா எனது மனைவி மீது கூறிய குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திப்போம். எனது மனைவி மீது கூறப்படும் பல பிரச்சினைகளை, இதற்கு முன்பு துணிவுடன் எதிர் கொண்டுள்ளார். இதனையும் அவர் எதிர் கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்