கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோகன் போபண்ணா - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
|மோன் போலெலி - ஆன்ரீயா வவாசோரி ஜோடியை வீழ்த்தி ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
சிட்னி,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கிய இந்த டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் இறுதி சுற்றில் ரோகன் போபண்ணா (இந்தியா) - மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி, இத்தாலியின் சிமோன் போலெலி - ஆன்ரீயா வவாசோரி இணையை சந்தித்தது.
1 மணி நேரம் 39 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 7-6, (7-0), 7-5 என்ற செட்களில் மோன் போலெலி - ஆன்ரீயா வவாசோரி ஜோடியை வீழ்த்தி ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் இணை சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோகன் போபண்ணா படைத்துள்ளார். அவர் 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
இந்நிலையில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோகன் போபண்ணாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், "வெற்றிபெற வயது ஒரு தடையில்லை என்பதை ரோகன் போபண்ணா மீண்டும் மீண்டும் காட்டுகிறார். வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலிய ஓபன் வெற்றிக்கு அவருக்கு எனது வாழ்த்துக்கள். எப்பொழுதும் நமது ஆன்மா, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியே நமது திறன்களை வரையறுக்கிறது என்பதை அவரது குறிப்பிடத்தக்க பயணம் ஒரு அழகான நினைவூட்டலாக உள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைதளத்தில், "ஆஸ்திரேலியா ஓபன் 2024ல் மேத்யூ எப்டனுடன் இணைந்து நமது ரோகன்போபண்ணா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆடவர் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 ஆக முன்னேறிய ரோகனுக்கு எனது வாழ்த்துக்கள். 43 வயதில், அவ்வாறு செய்யும் மூத்தவர். அவரது சாதனைகள் மற்றும் அவரது அபாரமான செயல்திறனுக்காக இந்தியா பெருமை கொள்கிறது!.. அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.