குடகில் மலையில் வெடிப்பு ஏற்பட்டு ஆறாக ஓடும் வெள்ளத்தால் பரபரப்பு
|குடகில் மலையில் வெடிப்பு ஏற்பட்டு வெள்ளம் ஆறாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
குடகு
குடகில் மலையில் வெடிப்பு ஏற்பட்டு வெள்ளம் ஆறாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
மலையில் வெடிப்பு
கர்நாடகத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக தீவிரமாக பெய்து வந்த தென்மேற்கு பருவமழை தற்போது சற்று ஓய்வெடுத்துள்ளது. மழை ஓய்ந்தாலும் வெள்ளம் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால் மக்கள் துயரத்தில் உள்ளனர். இந்த நிலையில், குடகு மாவட்டம் மடிகேரி அருகே ராமகொல்லி கிராமத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் பெரிய மலை உள்ளது. இந்த மலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மலையில் இருந்து தண்ணீர் ஆறாக ஓடுகிறது. சேறு கலந்த தண்ணீர் பாய்ந்தோடுகிறது. நொடிக்கு நொடி தண்ணீர் அதிகமாக வருகிறது. இதனால் ராமகொல்லி கிராமத்தை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
மக்கள் கவலை
மலையில் ஏற்பட்ட வெடிப்பால் தண்ணீர் ஓடுவதால் அங்கு வசிக்கும் 30 குடும்பங்களை சேர்ந்த மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அங்கு நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் நிலவுவதால், மக்கள் பதற்றத்தில் இருந்து வருகிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு இதே மலையில் வெடிப்பு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் ஏராளமான வீடுகள் இடிந்ததுடன், சாலைகளும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். 2018-ம் ஆண்டு போல் நடந்து விடுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.