< Back
தேசிய செய்திகள்
பிரபல வங்கியில் ரூ.12 கோடி கொள்ளை; பல மாதங்களாக தப்பிய ஊழியரின் சாமர்த்தியம்
தேசிய செய்திகள்

பிரபல வங்கியில் ரூ.12 கோடி கொள்ளை; பல மாதங்களாக தப்பிய ஊழியரின் சாமர்த்தியம்

தினத்தந்தி
|
5 Oct 2022 9:18 PM IST

பிரபல வங்கியில் ரூ.12 கோடி கொள்ளையடித்த ஊழியர் பல மாதங்களாக சிக்காமல் சாமர்த்தியமுடன் தப்பிய பின்னணி தெரிய வந்துள்ளது.



புனே,


மராட்டியத்தின் தானே நகரில் மன்பதா நகரில் பிரபல தனியார் வங்கி ஒன்று உள்ளது. இதில், வங்கி லாக்கர் சாவிகளின் பாதுகாவலர் உள்ளிட்ட பணிகளை செய்து வந்தவர் அல்டாப் ஷேக் (வயது 43).

ஓராண்டாக வங்கி கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளார். இதற்காக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி நடைமுறையில் உள்ள பலவீனங்கள் என்ன, அதற்கான உபகரணங்கள் என்ன தேவைப்படும்? உள்ளிட்ட விசயங்களை பற்றி தெரிந்து வைத்துள்ளார்.

இதன்படி, கடந்த ஜூலை 12-ந்தேதி வங்கியில் உள்ள ரூ.12 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணையை நடத்தி உள்ளனர். அதில், வங்கியின் அலாரம் நடைமுறை மற்றும் சி.சி.டி.வி. காட்சிகளை செயல்படாமல் செய்து விட்டு, பின்பு ஷேக் செயலில் இறங்கி உள்ளார்.

வங்கியில் பணம் இருப்பு வைக்கப்பட்ட பகுதியை திறந்து, அதில் இருந்த தொகையை ஏ.சி.யின் குழாய் பகுதியை பெரிதுபடுத்தி, அதன் வழியே அவற்றை கடத்தி கீழே கொண்டு சென்று குப்பை தொட்டியில் விழும்படி செய்துள்ளார். அதன்பின் யாரும் காணாதபோது, அதனை எடுத்து சென்றுள்ளார்.

சம்பவத்திற்கு பின் தப்பிய ஷேக், அவ்வப்போது, தனது நடை, உடை மற்றும் முக பாவனைகளை மாற்றியுள்ளார். தனது அடையாளம் தெரியாமல் இருக்க பர்கா அணிந்துள்ளார். ஷேக்கின் சகோதரி நிலோபர், அவரது நடவடிக்கைகளை அறிந்து வைத்துள்ளார். அந்த பணத்தில் ஒரு தொகையை எடுத்து தனது வீட்டில் நிலோபர் வைத்து கொண்டார்.

இந்நிலையில், தொடர்ந்து, இரண்டரை மாத விசாரணைக்கு பின்னர், ஷேக் கடந்த திங்கட் கிழமை கைது செய்யப்பட்டார். அவருடன் நிலோபர், அப்ரார் குரேஷி (வயது 33), அகமது கான் (வயது 33) மற்றும் அனுஜ் கிரி (வயது 30) உள்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

மொத்தம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.12 கோடியில் இதுவரை ரூ.9 கோடி வரை கைப்பற்றப்பட்டு உள்ளது. மீதமுள்ள தொகையை விரைவில் பறிமுதல் செய்வோம் என மண்டப காவல் நிலைய அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்