ஆந்திரா தொழில் அதிபர்களிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது
|2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர்களிடம் இருந்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோலார்:
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர்களிடம் இருந்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவை சேர்ந்தவர்கள்
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராமரெட்டி, பானுபிரசாத். தொழில் அதிபரான இவர்கள் இருவருக்கும், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனிவாசப்பூரை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தொழில் அதிபர்கள் தங்களிடம் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் ஏராளமாக இருப்பதாகவும், தற்போது ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மத்திய அரசு தடை செய்திருப்பதால், அந்த ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
உடனே அந்த நபர் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி பணத்துடன் சீனிவாசப்பூர் அருகே ராயல்பாடு பகுதிக்கு வரும்படி அழைத்துள்ளார். அதன்படி கடந்த 17-ந்தேதி 2 தொழில் அதிபர்களும் காரில் அங்கு வந்துள்ளனர்.
கொள்ளை
அப்போது லட்சுமிபுரா என்ற இடத்தில் அவர்களை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் முகமதிப்பு உடைய ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அப்போது தான், 2 ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி அந்த நபர் பணத்தை கொள்ளையடித்தது தொழில் அதிபர்களுக்கு தெரியவந்தது.
உடனே அவர்கள் இதுபற்றி ராயல்பாடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தொழில் அதிபர்களிடம் பணத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவர்களின் பெயர், விவரங்களை உடனே தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். பிடிபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.