2024-ஆம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான சாலை பணிகள் நிறைவேற்றப்படும் - நிதின் கட்கரி தகவல்
|வடகிழக்கு மாநிலங்களில் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் சுமார் 3 லட்சம் கோடி மதிப்பிலான சாலைப்பணிகள் நிறைவேற்றப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்கரிதெரிவித்துள்ளார்.
கவுகாத்தி,
வடகிழக்கு மாநிலங்களில் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் சுமார் 3 லட்சம் கோடி மதிப்பிலான சாலைப்பணிகள் நிறைவேற்றப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரிதெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், வடகிழக்கு மாநிலங்களில் இணைப்பை மேம்படுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. இதன்படி, தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் இனி நடைபெற உள்ள திட்டங்களை கணக்கிட்டால் அவற்றின் மதிப்பு சுமார் ரூ. 3 லட்சம் கோடியாக இருக்கும்.
இந்த திட்டங்கள் அனைத்தும் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும். சாலை பணிகளை தவிர, பாலங்கள், தளவாடங்கள், கயிறு பாதைகள், மற்றும் வழியோர வசதிகளுக்காக பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்சினை மற்றும் வனத்துறை அனுமதி ஆகிய பிரச்சினைகளை மாநில அரசுகள் உரிய நேரத்தில் தீர்த்து வைத்தால், மேலும் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை இந்த பகுதிக்கு ஒதுக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.