பெங்களூருவில் மழை நின்றதும் சாலை பள்ளங்கள் மூடப்படும்; மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பேட்டி
|பெங்களூருவில் மழை நின்றதும் அனைத்து சாலை பள்ளங்களும் மூடப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்தார்.
பெங்களூரு:
பேனர்களை அகற்ற உத்தரவு
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பெங்களூருவில் நேற்று நடைபயணமாக வந்து சாலைகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார். பெங்களூரு ராஜ்குமார் ரோடு, வாட்டாள் நாகராஜ் ரோடு உள்பட பல்வேறு ரோடுகளில் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்றபடி ரோடுகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார். சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை உடனே மூடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாகடி சந்திப்பு ரோடு அருகே சாலையோரம் குவிந்திருந்த குப்பை கழிவுகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன் பிறகு அவர் ஜெய் முனிராவ் சர்க்கிளில் இருந்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரை ஆய்வு மேற்கொண்டு நடைபாதைகளில் இருந்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார். அவருடன் தூய்மை பணியாளர்கள், பொக்லைன் எந்திரம், மண் ஏற்றிச் செல்லும் டிராக்டர்கள், மரங்களை வெட்டி அகற்றும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த ஆய்வுக்கு பிறகு துஷார் கிரிநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேவையான உபகரணங்கள்
பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலையில் ஏற்படும் பள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாங்கள் இதுவரை 23 ஆயிரம் பள்ளங்களை மூடியுள்ளோம். முக்கிய சாலைகளில் 500-க்கும் மேற்பட்ட பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி இருக்கும்.சாலை பள்ளங்களை மூடவே இல்லை, என்ஜினீயர்கள் பணியாற்றவில்லை என்று கூற முடியாது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தார்-ஜல்லி கலவை பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. மேலும் அவற்றுக்கு தேவையான உபகரணங்களை கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை. மழை நின்ற பிறகு அனைத்து பள்ளங்களும் மூடப்படும். சாலைகளில் குழிகளை மூடும் பைதான் எந்திரம் ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.