பெங்களூருவில் வருகிற 6-ந்தேதிக்குள் சாலை பள்ளங்கள் மூடப்படும்; மாநகராட்சி தலைமை கமிஷனர் பேட்டி
|பெங்களூருவில் வருகிற 6-ந் தேதிக்குள் சாலை பள்ளங்கள் அனைத்தும் மூடப்படும் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூருவில் சாலை பள்ளங்கள்
பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாரம் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக நகரில் உள்ள பல்வேறு சாலைகள் சேதம் அடைந்துள்ளது. சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தொல்லை அனுபவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தை மாநகராட்சி தீவிரமாக எடுத்து கொண்டு, சாலை பள்ளங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பெங்களூருவில் உள்ள சாலை பள்ளங்களை மூடுவதற்கான செலவு விவரங்களை அளிக்கும்படி கர்நாடக ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. அதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். தலைமை என்ஜினீயர் பிரகலாத், தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் விவகாரம் குறித்து சிறப்பு கமிஷனர் ரவீந்திரா தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
6-ந் தேதிக்குள் மூடப்படும்
மேலும் பெங்களூருவில் சாலை அமைத்தல் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த பிரிவு என்ஜினீயராக பணியாற்றி வந்த பிரகலாத் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக லோகேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் சாலை பள்ளங்களை மூடும் பணிகள், இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
அந்த பணிகள் அனைத்தும் வருகிற 6-ந் தேதிக்குள் முடிக்கப்படும். அதன்பிறகு, பெங்களூருவில் சாலை பள்ளங்கள் இருக்காது. அவ்வாறு சாலை பள்ளங்கள் மூடாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.