வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: புதிய உச்சம் தொட்ட தமிழக மின்தேவை
|கத்தரிவெயில் தொடங்குவதற்கு முன்பே மாநிலத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில 100 டிகிரியை கடந்து வெப்ப அலை வீசி வருகிறது.
சென்னை,
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் என்ற கத்தரிவெயில் தொடங்குவதற்கு முன்பே மாநிலத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில 100 டிகிரியை கடந்து வெப்ப அலை வீசியது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் மின் தேவை அதிகரித்தது.
இதனால் தமிழக மின்சாரத்தின் தேவை அதிகபட்சமாக நேற்று முன்தினம் 20 ஆயிரத்து 701 மெகாவாட் என்ற உச்சத்தை தொட்டது. முன்னதாக கடந்த மாதம் 3-ந்தேதி 19 ஆயிரத்து 413 மெகாவாட், 4-ந்தேதி 19 ஆயிரத்து 415 மெகாவாட், 5-ந்தேதி 19 ஆயிரத்து 850, 8-ந்தேதி 20 ஆயிரத்து 341 மெகாவாட், 26-ந்தேதி அதிகபட்சமாக 20 ஆயிரத்து 583 மெகாவாட் என்ற அளவில் தேவை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
தேவைக்கு ஏற்ப உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டு சீரான வகையில் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, சூரிய மின்சக்தி மூலம் 4 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல், காற்றாலைகளும் தற்போது மின்சார உற்பத்தியை தொடங்கி உள்ளது.
அனல் மின்நிலையங்களிலும் சராசரியாக 3 ஆயிரத்து 600 மெகாவாட் என்ற அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய தொகுப்பில் இருந்தும் 5 ஆயிரத்து 200 மெகாவாட்டுக்கு மேல் பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சீரான மின்சாரம் வினியோகம் செய்வதில் உறுதி பூண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று எரிசக்தி துறை அதிகாரிகள் கூறினர்.