காஷ்மீரில் சிறுபான்மையினரை முதல்-மந்திரியாக ஏற்பீர்களா? மெகபூபா முப்தியிடம் பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி
|சில அரசியல்வாதிகள் துரதிர்ஷ்டவசமாக அரசியல் நோக்கத்துக்காக இந்த வாய்ப்பைபயன்படுத்துவது வருத்தமளிக்கிறது என்று ரவிசங்கர் பிரசாத் பதிவிட்டார்.
புதுடெல்லி,
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றது குறித்து இந்திய அரசியலில் விவாதங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
'இந்தியாவில் எந்த சிறுபான்மையினரும் பிரதமராக முடியுமா' என்ற கேள்வியை அரசியல் தலைவர்கள் எழுப்பியுள்ளனர்.காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் டுவிட்டர் பதிவிற்கு பிறகு, இந்த சலசலப்பு தொடங்கியது.
சசி தரூர் நேற்று தனது டுவிட்டர் பதிவில், "சிறுபான்மையின பிரிவை சேர்ந்த ஒருவரை மிக மிக உயரிய அரசாங்க பொறுப்பில் ந்க்கிலாந்து நாட்டினர் ஏற்றவுள்ளனர். இதன் மூலம், உலகில் மிகவும் அரிதான ஒன்றை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
இந்தியர்கள் ரிஷி சுனக்கின் இந்த ஏற்றத்தை கொண்டாடும் அதேவேளையில், நாம் நேர்மையாக ஒரு கேள்வியை கேட்போம், 'இது போன்று இங்கே(இந்தியாவில்) நடக்குமா?'" என்று கேள்வி எழுப்பினார்.அவரது இந்த டுவீட்டை தொடர்ந்து, பல தலைவர்களின் டுவீட்கள் வெளியாகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தி சமூக வலைதளங்களில் கூறுகையில், "இங்கிலாந்தில் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக பதவியேற்பது பெருமையான தருணம். முழு இந்தியாவும் உண்மையிலேயே கொண்டாட வேண்டிய விஷயம்.
யுனைடெட் கிங்டம்(இங்கிலாந்து) சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக ஏற்றுக்கொண்டது நினைவுகூரத்தக்கது. மறுபுறம், என் ஆர் சி மற்றும் சி ஏ ஏ போன்ற பிளவுபடுத்தும் மற்றும் பாரபட்சமான சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம்" என்று பதிவிட்டார்.
மெகபூபா முப்தியின் இந்த டுவீட்டிற்கு பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் எந்த சிறுபான்மையினரையும் முதல்-மந்திரியாக ஏற்பீர்களா என்று மெகபூபா முப்தியிடம் கேட்டார்.
அவர் கூறியதாவது, "இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து மெகபூபா முப்தியின் ட்வீட்டைப் பார்த்தேன். நீங்கள் (மெகபூபா முஃப்தி) ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினரை முதல்வராக ஏற்பீர்களா? இதற்கு தெளிவான பதில் கூறுங்கள்.
பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, சில தலைவர்கள் பெரும்பான்மைவாதத்திற்கு எதிராக தீவிரம் காட்டினர். அப்துல் கலாம் ஜனாதிபதியாகவும், மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் பிரதமராகவும் இருந்ததை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதுமட்டுமின்றி, பழங்குடியினரின் தலைசிறந்த தலைவரான திரவுபதி முர்மு தற்போது நமது ஜனாதிபதியாக உள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திறமையான தலைவர் ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகிறார். இந்த அசாதாரண வெற்றிக்காக நாம் அனைவரும் அவரைப் பாராட்ட வேண்டும். சில இந்திய அரசியல்வாதிகள் துரதிர்ஷ்டவசமாக அரசியல் நோக்கத்துக்காக சுட்டிக்காட்ட இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவது வருத்தமளிக்கிறது" என்று பதிவிட்டார்.