< Back
தேசிய செய்திகள்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு - ஏ.ஐ.சி.டி.இ. அறிவிப்பு
தேசிய செய்திகள்

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு - ஏ.ஐ.சி.டி.இ. அறிவிப்பு

தினத்தந்தி
|
22 May 2022 3:48 PM IST

புதிய விகிதங்களை வரும் கல்வி ஆண்டு முதல் தொழிற்கல்வி நிலையங்கள் அமல்படுத்த வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ. பரிந்துரைத்துள்ளது.

புதுடெல்லி,

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழு(ஏ.ஐ.சி.டி.இ.) நாடு முழுவதும் உள்ள தொழிற்கல்வி படிப்புகளுக்கான கட்டணங்களை மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே போல ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரியர்களின் சம்பள விகிதங்களும் மாற்றப்பட்டுள்ளன.

இந்த புதிய விகிதங்களை நாடு முழுவதும் உள்ள தொழிற்கல்வி நிலையங்கள் வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ. பரிந்துரைத்துள்ளது. இதன்படி பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இந்த கட்டணம் 55 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் வரை இருந்தது வந்தது. இதே போல், டிப்ளோமா படிப்புகளுக்கான கட்டணங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சம் ரூ.67,900 முதல் அதிகபட்சம் ரூ.1,40,900 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே போல் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., உள்ளிட்ட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதில் குறைந்தபட்சமாக ரூ.1,40,000 முதல் அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி ஆசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்கிட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் ஏ.ஐ.சி.டி.இ. பரிந்துரை செய்துள்ளது. அதன்படி உதவி பேராசிரியர்களுக்கான சம்பளம் ரூ.1,37,000 என்றும், பேராசிரியர்களுக்கான சம்பளம் ரூ.2,60,000 என்றும் மாற்றி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பரிந்துரைகளை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்