மணிப்பூரில் தொடரும் கலவரம்; போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழப்பு
|மணிப்பூரில் புதிதாக ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இம்பால்,
மணிப்பூரில் மெஜாரிட்டியாக உள்ள மெய்தி சமூகத்திற்கும் மற்றும் பழங்குடி பிரிவினருக்கும் இடையே கடந்த மே மாதம் 3-ந்தேதி கலவரம் வெடித்தது. இந்த மோதலில் பொதுமக்களில் 120 பேர் உயிரிழந்தும், 3 ஆயிரம் பேர் காயமடைந்தும் உள்ளனர். இந்த கலவரம் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது.
தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில், மக்கள் அச்சம் மற்றும் பதற்றத்துடனேயே உள்ளனர். இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் என அன்றாட பணியில் ஈடுபட்டு இருந்தவர்கள் கூட ஆயுதங்களை ஏந்திய சூழல் காணப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில், மோதலை தூண்டும் வகையில் வதந்தி பரவி விடாமல் தடுப்பதற்காக, கடந்த மாதம் 3-ந்தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த 5-ந்தேதியுடன் முடிவடைந்த இந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு உள்ளது.
எனினும், கலவரம் தொடர்ந்து அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் இரவு நேரத்தில் மலைப்பிரதேச பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்த கும்பல் ஒன்று கிராமவாசிகள் மீது தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. பல கிராமங்களில் புகுந்து தீ வைப்பிலும் ஈடுபட்டது. அவர்களை திரும்பி போகும்படி கிராமவாசிகள் கேட்டு கொண்டனர். ஆனால், கும்பல் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டது.
அவர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி விடாமல் தடுக்க கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் துப்பாக்கி சூடும் நடத்தி உள்ளனர். இதனால், பதிலுக்கு மற்றொரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் கங்வாய் பகுதியில் போலீஸ் அதிகாரி ஒருவர், டீன்-ஏஜ் சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்து உள்ளனர். சிலர் காயம் அடைந்து உள்ளனர். இதனால், மீண்டும் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.