விக்டோரியா கவுரி விவகாரம்: அரசியல் தொடர்புடைய வக்கீல்களை நீதிபதியாக நியமிக்கலாம் - கிரண் ரிஜிஜூ ஆதரவு
|அரசியல் தொடர்புடைய வக்கீல்கள் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு தனது ஆதரவை கிரண் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
குமரி மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் விக்டோரியா கவுரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். பா.ஜனதாவை சேர்ந்த இவரை சென்னை ஐகோர்ட்டுக்கு நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்து உள்ளது.
ஆனால் கட்சி சார்புடைய வக்கீலான விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிப்பதற்கு வக்கீல்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்த பரிந்துரையை திரும்பப்பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்துக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை தனது டுவிட்டர் தளத்தில் பகிர்ந்திருந்த முன்னாள் கவர்னர் ஸ்வராஜ் கவுசல், அரசியல் கட்சி எம்.பி.க்கள் ஐகோர்ட்டுகளில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட வரலாறு உண்டு என குறிப்பிட்டு இருந்தார்.
குறிப்பாக நீதிபதிகள் கே.எஸ்.ஹெக்டே, பகருல் இஸ்லாம் ஆகிய இருவரும் நீதிபதியாக பணியமர்த்தப்பட்டபோது காங்கிரஸ் எம்.பி.க்களாக இருந்ததாகவும், நீதிபதி கிருஷ்ண ஐயர் கேரள கேபினட் மந்திரியாக இருந்தார் என்றும் சுட்டிக்காட்டி இருந்தார்.
அதேநேரம் நீதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டபின், அதன்படி நடக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
முன்னாள் கவர்னரின் இந்த டுவிட்டை மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ தனது தளத்தில் பகிர்ந்து (ரீடுவிட்) இருந்தார். இதன் மூலம் அரசியல் தொடர்புடைய வக்கீல்கள் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார்.