மோடி ஆட்சியில் பணக்காரர்கள், மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் - கபில்சிபல் எம்.பி. குற்றச்சாட்டு
|மோடி ஆட்சியில் பணக்காரர்கள், மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள் என்று கபில்சிபல் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
பா.ஜனதா நிறுவன தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சமூக நீதிக்காக பா.ஜனதா உறுதி பூண்டிருப்பதாகவும், மற்ற கட்சிகள் ஒரு குடும்ப நலனுக்காகவே சமூகநீதி கோஷம் எழுப்புவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், இதை சுட்டிக்காட்டி, முன்னாள் மத்திய மந்திரியும், சுயேச்சை எம்.பி.யுமான கபில்சிபல் விமர்சித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பா.ஜனதா, சமூக நீதிக்காக வாழ்வதாக பிரதமர் கூறியுள்ளார். ஆனால், உண்மையில், 2012 முதல் 2021-ம் ஆண்டுவரை உருவாக்கப்பட்ட 40 சதவீத சொத்துகள், வெறும் 1 சதவீதம் பேரின் கைகளுக்கு சென்றுள்ளன. 2022-ம் ஆண்டில், அதானி சொத்து மதிப்பு 46 சதவீதம் உயர்ந்துள்ளது.
அடிமட்டத்தில் உள்ள 50 சதவீதம்பேரிடம் இருந்து 64 சதவீத ஜி.எஸ்.டி. வருவாய் கிடைக்கிறது. ஆனால், மேல்மட்டத்தில் உள்ள 10 சதவீதம் பேரிடம் இருந்து 4 சதவீத ஜி.எஸ்.டி.தான் கிடைக்கிறது. மோடி ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்.