அசாம்: தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திய காண்டாமிருகம் - வைரலாகும் வீடியோ
|காசிரங்கா தேசிய பூங்காவில் காண்டாமிருகம் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
காசிரங்கா,
அசாமின் காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் ஒன்று சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தைத் துரத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள பகோரி வன வரம்பு அலுவலக பகுதியின் கீழ் நடந்தது. ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் வாகனத்தின் பின்னால் துரத்துவதை சுற்றுலாப் பயணி ஒருவர் பார்த்தார். அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், காண்டாமிருகம் தங்களுடைய வாகனத்தை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு துரத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து காசிரங்கா தேசிய பூங்காவின் வனத்துறை அதிகாரி, ரமேஷ் கோகோய் கூறுகையில், வெள்ளிக்கிழமை மாலை பூங்காவின் பகோரி மலைத்தொடரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காண்டாமிருகம் துரத்தியதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.
முன்னதாக, அசாமின் மனாஸ் தேசிய பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் ஒன்று பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திச் செல்லும் வீடியோ வைரலானது. இந்த சம்பவம் டிசம்பர் 29 அன்று நடந்தது.
அசாமின் காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 200 அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 2613 ஆக உள்ளது. இதில் 866 ஆண்கள், 1049 பெண்கள், 146 கன்றுகள் உள்ளன.