தெலுங்கானா புதிய முதல்-மந்திரி யார்?, பதவியேற்பு எப்போது? - வெளியான தகவல்
|தெலுங்கானாவில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றுள்ளது.
அமராவதி,
மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் எண்ணப்பட்டன. இதில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்காரில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. அதேவேளை மிசோரத்தில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அங்கு, சோரம் மக்கள் இயக்கம் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
இதனிடையே, தெலுங்கானாவில் காங்கிரஸ் 64 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்த பாரதிய ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து மாநிலத்தின் புதிய முதல்-மந்திரி யார்? என்பது குறித்து பரபரப்பு கருத்துகள் நிலவி வந்தன. அந்த வகையில் தெலுங்கானாவில் புதிய முதல்-மந்திரியாக ரேவந்த் ரெட்டி பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவரான ரேவந்த் ரெட்டி அம்மாநில முதல்-மந்திரியாக நாளை பொறுப்பேற்க உள்ளார். ரேவந்த் ரெட்டியின் பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
ரேவந்த் ரெட்டி தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் முதல்-மந்திரி வேட்பாளர் முகமாக அறிமுகப்படுத்தப்பட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.