ஹாசன், ஒலேநரசிப்புரா தொகுதிகளில் ரேவண்ணா போட்டி?
|ஹாசன், ஒலேநரசிப்புரா தொகுதிகளில் ரேவண்ணா போட்டியா தேவேகவுடாவுடன் திடீர் சந்திப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு-
224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கு 2 கட்டமாகவும், ஜனதாதளம்(எஸ்) 93 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆளும் பா.ஜனதா கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சியிலும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஹாசன் மாவட்டத்தில் இன்னும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படாமல் உள்ளனர். காரணம், கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவின் மூத்த மருமகளும், ரேவண்ணாவின் மனைவியுமான பவானி, ஹாசனில் டிக்கெட் கேட்டு அடம் பிடித்து வருகிறார். ஆனால் குமாரசாமி அவருக்கு டிக்கெட் கொடுக்க விரும்பவில்லை. அவருக்கு பதிலாக ஸ்வரூப் என்பவருக்கு டிக்கெட் கொடுக்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். இதனால் ஹாசன் தொகுதி டிக்கெட் விவகாரத்தில் தேவேகவுடா குடும்பத்தில் குழப்பம் நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மனைவிக்கு டிக்கெட் கொடுக்காவிட்டால் தானும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ரேவண்ணா, பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தேவேகவுடாவின் வீட்டுக்கு திடீரென்று வந்தார். அவர் தேவேகவுடாவின் உடல் நலம் குறித்து விசாரித்தார். பின்னர் ஹாசன் டிக்கெட் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஹாசன் தொகுதியில் பவானிக்கு டிக்கெட் கொடுக்காவிட்டால் ஹாசன் மற்றும் ஒலேநரசிப்புரா 2 தொகுதிகளிலும் தானே போட்டியிடு வதாக கூறியதாகவும் தெரிகிறது. இதனை கேட்ட தேவேகவுடா, இந்த விவகாரத்தில் தானே இறுதி முடிவு எடுக்கிறேன் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.