வரி செலுத்துவோருக்கு வசதியாக புதிய அம்சங்களுடன் வருமான வரித்துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம்
|வரி செலுத்துவோருக்கு வசதியாக புதிய அம்சங்களுடன் வருமான வரித்துறையின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் செயல்பாட்டுக்கு வந்தது.
புதுடெல்லி,
வருமான வரி செலுத்துவோருக்காக தொடங்கப்பட்ட இணையதளம் பல்வேறு குறைபாடுகளுடன் இருந்தது. இதனால் வரி செலுத்துவோர் ஏராளமான சிரமங்களை அனுபவித்தனர்.
எனவே இவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் அந்த இணையதளத்தை புதுப்பிக்கும் பணிகள், குறிப்பாக பல்வேறு வசதிகளை சேர்த்து புதிதாக உருவாக்கும் பணிகள் நடந்தன.
இந்த இணையதளத்தை மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் நிதின் குப்தா நேற்று உதய்பூரில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்துடன் வேகத்தைத் தக்கவைக்கவும், வருமான வரித்துறை தனது தேசிய இணையதளமான 'www.incometaxindia.gov.in' பயனாளருக்கு நெருக்கம், மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்கள் மற்றும் புதிய வசதிகளுடன் புதுப்பித்துள்ளது' என குறிப்பிடப்பட்டு இருந்தது.