< Back
தேசிய செய்திகள்
இந்தியாவில் ஜூலை மாத சில்லறை பணவீக்கம் குறைவு! மத்திய அரசு தகவல்
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஜூலை மாத சில்லறை பணவீக்கம் குறைவு! மத்திய அரசு தகவல்

தினத்தந்தி
|
12 Aug 2022 8:10 PM IST

இந்தியாவில் சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தை விட ஜூலையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் சில்லறை பணவீக்கம் ஜூன் மாதத்தை(7.01 சதவீதம்) விட ஜூலையில் 6.71 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இந்த தகவலை இன்று வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 5.59 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நகரப் பகுதிகளில் பணவீக்கம் 6.49 சதவீதமாக உள்ளது. கிராமப் பகுதிகளில் பணவீக்கம் 6.80 சதவீதமாக உள்ளது. எனினும், கிராமப்புற பணவீக்கம் தொடர்ந்து இரண்டு மாதங்களாக உயர்வாகவே உள்ளது ஒரு பிரச்சினையாக இருக்கிறது.

நுகர்வோர் உணவு விலை குறியீடு 6.75 சதவீதமாக உள்ளது. இது ஜூன் மாதத்தை விட குறைவாகும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகபட்சமாக 7.79 சதவீதமாக இருந்தது. அதன்பின், தொடர்ந்து மெல்ல குறைந்து வருகிறது.

அதன்படி கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக ஜூலையில் வெகுவாக சில்லறை பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளது. உணவுப் பொருட்களில் இறைச்சி, சமையல் எண்ணெய் போன்ற பொருட்களின் விலை குறைந்துள்ளது. காய்கறிகளின் விலையும் லேசாக குறைந்துள்ளது.

அதேநேரத்தில், நுகர்வோர் விலை குறியீடானது ரிசர்வ் வங்கி நிர்ணயித்ததை விட அதிகரித்து சதவீதமாக உள்ளது. எனினும் கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து 6 சதவீதத்திற்கும் மேலாக சில்லறை பணவீக்கம் உள்ளது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதனால் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் எனத் தெரிகிறது. தொடர்ந்து வட்டி விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்