ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை - நாடாளுமன்றக்குழு பரிந்துரை
|ரெயில் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்குமாறு மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்து உள்ளது.
புதுடெல்லி,
ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு ரெயில்வேக்கு செலவானது.
ஆனால் கொரோனா தொற்றால் ரெயில்வே வருவாய் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த சலுகை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த சலுகையை மீண்டும் வழங்க மத்திய அரசு மறுத்து உள்ளது. தற்போதைய நிலையில் 4 வகையான மாற்றுத்திறனாளிகள், 11 வகையான நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டுமே கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மீதமுள்ள சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
ரெயில்வே அமைச்சகத்தின் இந்த அறிவிப்பை நாடாளுமன்ற நிலைக்குழு விரிவாக ஆய்வு செய்தது. இதற்கு பதிலளித்துள்ள நிலைக்குழு, மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசை அறிவுறுத்தி இருக்கிறது. பா.ஜனதா தலைவர் ராதாமோகன் சிங் தலைமையிலான இந்த குழு, இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடந்த 4-ந்தேதி அறிக்கை அளித்துள்ளது.
அதில், 'மத்திய அரசின் பதிலின் அடிப்படையில், கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டு உள்ள மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை தற்போது வரை திரும்ப வழங்கவில்லை என இந்த குழு கருதுகிறது. கொரோனாவால் ஏற்பட்ட வருவாய் பாதிப்புகளில் இருந்து ரெயில்வே தற்போது மீண்டு வரும் நிலையில், பல்வேறு வகையான பயணிகளுக்கான நியாயமான கட்டண சலுகையை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்' என அறிவுறுத்தி உள்ளது.
ெகாேரானாவுக்கு முந்தைய காலங்களில் மூத்த குடிமக்களுக்கு கிடைத்த சலுகைகள் குறைந்தபட்சம் படுக்கை வசதி மற்றும் 3-ம் வகுப்பு ஏ.சி. பயணிகளுக்காவது வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள இந்த குழு, இதன் மூலம பாதிக்கப்படக்கூடிய மற்றும் உண்மையிலேயே தேவைப்படும் மூத்த குடிமக்கள் மேற்படி வசதியைப் பெற முடியும் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
அதேநேரம் இந்த சலுகையை விட்டுக்கொடுக்கும் வசதியை பரவலாக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்குமாறும் இந்த குழு ரெயில்வே துறையை கேட்டுக்கொண்டு உள்ளது. இதன் மூலம் மூத்த குடிமக்கள் தானாகவே சலுகையை விட்டுக்கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளது.