< Back
தேசிய செய்திகள்
சட்டம் அடக்குமுறைக்கான கருவியாக மாறக்கூடாது: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
தேசிய செய்திகள்

சட்டம் அடக்குமுறைக்கான கருவியாக மாறக்கூடாது: தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

தினத்தந்தி
|
12 Nov 2022 5:25 PM IST

சட்டம் அடக்குமுறையின் கருவியாக மாறாமல் பார்த்துக் கொள்வது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உள்பட அனைவரின் பொறுப்பு.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாட்டில் பேசியதாவது:-

சட்டம் அடக்குமுறையின் கருவியாக மாறாமல் பார்த்துக் கொள்வது நீதிபதிகள் மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உள்பட முடிவெடுப்பவர்கள் அனைவரின் பொறுப்பு.ஒருபுறம் குடிமக்களிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகள் இருப்பது மிகவும் நல்லது. ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின் நிறுவனங்களாக விளங்கும் நீதிமன்றங்களுக்கான வரம்புகளையும் திறனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் சட்டமும் நீதியும் ஒரே நேரிய பாதையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. சட்டம் நீதிக்கான கருவியாக உள்ளது ஆனால் அதே சட்டம் அடக்குமுறைக்கான கருவியாகவும் உள்ளது.

காலனித்துவ காலங்களில், இதே சட்டம் அடக்குமுறைக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டதை நாம் அறிவோம். இதற்கான முக்கிய வழி, சட்டம் அடக்குமுறையின் கருவியாக மாறாமல் பார்த்துக் கொள்வது நீதிபதிகள் மட்டுமல்ல, முடிவெடுப்பவர்கள் அனைவரின் பொறுப்பு.

குடிமக்களின் கண்ணீருக்கு பதிலளிக்கும் திறன், இரக்க உணர்வு, பச்சாதாப உணர்வு ஆகியவையே நீண்ட காலத்திற்கு நீதித்துறை நிறுவனங்களைத் தக்கவைக்கும்.

சமூக ஊடகங்கள் மிகப்பெரிய சவால்களில் ஒன்றை முன்வைத்துள்ளன. நீதிமன்ற அறைகளில் நீதிபதி கூறும் ஒவ்வொரு சிறிய வார்த்தையும் உடனுக்குடன் சமூக ஊடகங்கள் மூலம் செய்தியாகின்றன.

நாம் இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் சகாப்தத்தில் வாழ்கிறோம். நாம் வாழும் காலத்தின் சவால்களை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதில் நமது பங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும், நாம் புதிய தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்