ரஷியா-உக்ரைன் போர் பற்றிய தீர்மானம் அனைவராலும் ஏற்று கொள்ள கூடியது: நெதர்லாந்து பிரதமர் பேட்டி
|ரஷியா-உக்ரைன் போர் பற்றிய தீர்மான விசயங்கள் ஆனது, அனைவராலும் நிர்வகிக்க கூடியது மற்றும் ஏற்று கொள்ள கூடியது என்று நெதர்லாந்து பிரதமர் மார்க் ருத்தே பேட்டியில் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்று வரும் ஜி-20 உச்சி மாநாட்டில் பல்வேறு விசயங்களை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.
இந்த மாநாட்டில் உக்ரைன்-ரஷியா இடையேயான போர், ஜி-20 உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகம் உள்ளிட்டவை பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
உக்ரைனில் ஏற்பட்ட போரால் உலகளவில் உணவு தானியம், எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. நிதி ஸ்திரத்தன்மை, வளர்ச்சி உள்ளிட்டவற்றில் இந்த போரானது தாக்கம் ஏற்படுத்தி உள்ளது என மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐ.நா. சபை எடுத்த நிலைப்பாட்டை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஜி-20 உச்சி மாநாட்டில் தலைவர்களின் தீர்மானம் பற்றி நெதர்லாந்து பிரதமர் மார்க் ருத்தே கூறும்போது, இறுதியான ஒரு முடிவுக்கு நாங்கள் வந்து விட்டோம் என்பதே மிக நல்லது என நான் நினைக்கிறேன் என கூறினார்.
உக்ரைன்-ரஷியா போர் பற்றி அவர் கூறும்போது, ரஷியா-உக்ரைன் போர் விசயத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கிய விசயங்கள் ஆனது, அனைவராலும் நிர்வகிக்க கூடியது மற்றும் ஏற்று கொள்ள கூடியது என்று கூறியுள்ளார்.