பா.ஜ.க.வில் இருந்து விலகல்; ராஜினாமா கடிதம் கொடுக்க 1,200 கார்கள் சூழ சென்ற எம்.எல்.ஏ.
|பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த எம்.எல்.ஏ. சமந்தர் பட்டேல் ராஜினாமா கடிதம் கொடுக்க 1,200 கார்கள் சூழ தொண்டர்களுடன் சென்றார்.
போபால்,
மத்திய பிரதேசத்தின் ஜாவத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சமந்தர் பட்டேல். மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவின் தீவிர விசுவாசியான இவர், காங்கிரசில் இருந்து விலகி, கடந்த 2020-ம் ஆண்டு பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.
இந்த நிலையில் அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து, தனது ஜாவத் தொகுதியில் இருந்து போபால் நோக்கி ராஜினாமா கடிதம் கொடுப்பதற்காக 1,200 கார்கள் சூழ அவர் சென்றார்.
பா.ஜ.க.வில் இருந்தபோது, மூச்சு திணறல் போன்ற உணர்வு ஏற்பட்டது என அவர் கூறியுள்ளார். எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பு இல்லை. மதிப்பும் மறுக்கப்பட்டது. அதிகாரமும் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.
இதேபோன்று, கடந்த ஜூன் 14-ந்தேதி, பைஜ்நாத் சிங் யாதவ் சிந்தியாவுடனான தனது தொடர்பை துண்டித்து கொண்டார். பா.ஜ.க.வில் இருந்து அவர் விலகினார்.
அவரும் 700 கார்கள் சூழ தொண்டர்களுடன் பேரணியாக அப்போது சென்று பரபரப்பு ஏற்படுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க.வின் ஷிவ்புரி மாவட்ட துணை தலைவர் ராகேஷ் குமார் குப்தா கடந்த ஜூன் 26-ல் கட்சியில் இருந்து விலகினார்.