< Back
தேசிய செய்திகள்
துமகூருவில் கொட்டி தீர்த்த கனமழை; குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது
தேசிய செய்திகள்

துமகூருவில் கொட்டி தீர்த்த கனமழை; குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது

தினத்தந்தி
|
31 July 2022 10:54 PM IST

துமகூருவில் கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

பெங்களூரு:

கனமழை

கர்நாடகத்தில் பெங்களூரு, துமகூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. பெங்களூரு ராஜாஜிநகர், அவென்யூ ரோடு, எச்.எஸ்.ஆர். லே-அவுட், குமாரசாமி லே-அவுட், விதான சவுதா, மெஜஸ்டிக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. குமாரசாமி லே-அவுட்டில் பெய்த கனமழையின் போது ராஜகால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ராஜகால்வாயையொட்டியுள்ள 50 வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது.

இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களை தண்ணீர் சூழ்ந்தது. யஷ்வந்தபுரம் ஜே.பி.பார்க் பகுதியிலும் தாழ்வான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

வெள்ளம் சூழ்ந்தது

துமகூரு மாவட்டத்தில் துமகூரு டவுன், புறநகர் பகுதிகளில் மாலையில் பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை பெய்தது. இதன் காரணமாக துமகூரு புறநகரில் உள்ள அமானிகெரே ஏரிக்கு செல்லும் ராஜகால்வாயில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ராஜகால்வாயில் தண்ணீர் செல்ல முடியாததால், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. துமகூருவில் பெய்த கனமழைக்கு சதாசிவநகர் பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள 50 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

சதாசிவநகர், ஜெயநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன், சாக்கடை கழிவு நீரும் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதிகளில் வசிப்பவர்கள் இரவில் தூங்க முடியாமல் பரிதவித்தனர்கள். இதுபோல், துமகூருவில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானாா்கள்.

முதியவர் சாவு

இந்த நிலையில், துமகூரு டவுன் உப்பாரஹள்ளியில் வசித்து வந்த வீரண்ணா (வயது 75) என்பவரின் வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. அப்போது தூங்கி கொண்டு இருந்த வீரண்ணா எழுந்து வெளியே வர முயன்றார். அந்த சந்தர்ப்பத்தில் வீரண்ணாவை மின்சாரம் தாக்கியது. இதன் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மழையின் காரணமாக வீரண்ணா வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு, அவர் பலியாகி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

துமகூருவில் பெய்த கனமழை காரணமாக கோடிகெரே ஏரி 15 ஆண்டுக்கு பின்பு நிரம்பி உள்ளது. அந்த ஏரியில் இருந்து அதிக அளவிலான தண்ணீர் வெளியேறுவதால், ஏரியையொட்டி வசிப்பவர்கள் வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால், மக்கள் அவதிக்கு உள்ளானார்கள். இதற்கிடையில், கால்வாய் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தான் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்