கர்நாடகத்தில் போலீஸ் துறையில் 3-ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு; மந்திரி அரக ஞானேந்திரா அறிவிப்பு
|கர்நாடகத்தில் போலீஸ் துறையில் 3-ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீட்டை வழங்கி போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு:
வாழ்வாதாரம்
உலகம் முழுவதும் 3-ம் பாலினத்தவர் என்று கூறப்படும் திருநங்கைகளும், திருநம்பிகளும் வசித்து வருகிறார்கள். இதில் இந்தியாவில் மும்பை உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்களில் திருநங்கைகள் தெய்வங்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் பல்வேறு இடங்களில் திருநங்கைகள் கேலி பொருளாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். மேலும் அவர்களை பலர் ஒதுக்கி வைக்கிறார்கள்.
இதனால் அவர்கள் தங்கள் குடும்பம், உறவினர்கள் என இந்த சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களிடம் இருந்து ஒதுங்கி தங்களைப் போன்றவர்களுடன் சேர்ந்து தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
அரசு திட்டங்கள்
அவர்களுக்கு என்று அரசு பல்வேறு திட்டங்கள், சலுகைகள் வழங்கியும் அது முறையாக அவர்களை சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அவர்கள் தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
அதன் ஒருபடியாக நாட்டிலேயே முதல்முறையாக கர்நாடகத்தில் 3-ம் பாலினத்தவருக்கு போலீஸ் துறையில் வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது. இது 3-ம் பாலினத்தவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இடஒதுக்கீடு
மாநிலத்தில் போலீஸ் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, கர்நாடக ஆயுதப்படை போலீஸ் பிரிவில் காலியாக உள்ள 3,484 பணி இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு இருக்கிறது. போலீஸ் பணியில் சேர விரும்புபவர்கள் அடுத்த மாதம்(அக்டோபர்) 31-ந் தேதிக்குகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மாநிலத்தில் முதல் முறையாக போலீஸ் துறையில் 3-ம் பாலினத்தவர் என்று அழைக்கப்படும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, 3,484 பணி இடங்களுக்கு நடைபெறும் போலீஸ் தேர்வில், 79 இடங்கள் 3-ம் பாலினத்தவர் பணியில் சேருவதற்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்கிறது. 3,484 பணி இடங்களில், 420 பணி இடங்கள் கல்யாண கர்நாடக மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 11 இடங்கள் 3-ம் பாலினத்தவருக்கு ஒதுக்கப்படுகிறது.
79 பணி இடங்கள்
மீதமுள்ள 3,064 போலீஸ் பணி இடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது. அவற்றில் 68 இடங்கள் 3-ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டு மொத்தமாக கர்நாடக ஆயுதப்படை போலீஸ் பிரிவில் 79 இடங்கள் 3-ம் பாலினத்தவருக்கு போலீஸ் பணியில் சேர வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக போலீஸ் துறையில் 3-ம் பாலினத்தவர் பணியில் சேருவதற்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதற்கு திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் சமூகத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுபோல், திருநங்கைகளின் நலனுக்காக செயல்பட்டு வரும் ஒன்டேட் நிறுவனமும் வரவேற்றுள்ளது. இதுகுறித்து ராஜ்யோத்சவா விருது பெற்ற திருநங்கையான அக்கை பத்மஷாலி கூறியதாவது:-
கல்வித்தகுதி அவசியம்
கர்நாடக போலீஸ் துறையில் திருநங்கைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கி இருக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன். அதே நேரத்தில் போலீஸ் துறையில் சேருவதற்கு கல்வித்தகுதி மிகவும் அவசியமாகும். திருநங்கைகளில் பலர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் ஆவார்கள். 10-ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.
எனவே உரிய கல்வித்தகுதியுடன் இருக்கும் திருநங்கைகள், போலீஸ் துறையில் சேர்ந்து பணியாற்ற முன்வர வேண்டும். திருநங்கைகளுக்குள் இருக்கும் கலாசார அடையாளங்கள், பன்முகத்தன்மை ஆகியவற்றை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.