ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு; வாலிபர் கைது
|சாம்ராஜ்நகரில் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கொள்ளேகால்;
ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை
சாம்ராஜ்நகர் மாவட்டம் கோல்டு சாலையை சேர்ந்தவர் பசவா (வயது 36). இவரது மனைவி நாகவேணி (23). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நாகவேணிக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு 2-வது ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், தம்பதியிடம் இருந்து ககலிபுராவை சேர்ந்த காசி என்பவர், ஆண் குழந்தையை வலுக்கட்டாயமாக வாங்கி சென்றார். மேலும் அந்த குழந்தையை மண்டியாவை சேர்ந்த தம்பதிக்கு ரூ.50 ஆயிரத்துக்கு காசி விற்பனை செய்தார். இதுபற்றி அந்த பசவா-நாகவேணி தம்பதி வெளியே யாரிடமும் கூறவில்லை.
குழந்தை மீட்பு
இந்த நிலையில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது பற்றி குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள், சாம்ராஜ்நகர் போலீசார் உதவியுடன் குழந்தையை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.இந்த நிலையில் மண்டியாவை சேர்ந்த தம்பதியிடம் இருந்த பச்சிளம் ஆண் குழந்தையை அதிகாரிகள் மீட்டனர்.
இதுகுறித்து சாம்ராஜ்நகர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை விற்பனை செய்த காசி என்பவரை கைது செய்தனர். மேலும் குழந்தையை வாங்கிய மண்டியாவை சேர்ந்த தம்பதியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.