'நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்..' - பாலியல் வழக்கில் விமானப்படை உயரதிகாரிக்கு முன்ஜாமீன்
|பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட விமானப்படை உயரதிகாரிக்கு முன்ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்திய விமான படையை சேர்ந்த 26 வயது பெண் அதிகாரி ஒருவர், விமானப்படையின் விங் கமாண்டர் தரத்திலான உயரதிகாரி மீது பாலியல் புகார் அளித்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், காஷ்மீரின் புத்காம் காவல் நிலையத்தில் 376(2)-வது பிரிவின் கீழ் வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது.
அந்த பெண் அதிகாரி அளித்துள்ள புகாரில், கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, சம்பந்தப்பட்ட உயரதிகாரி தன்னை அவரது அறைக்கு தனியாக அழைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மேலிடத்தில் புகார் அளித்தபோதும், உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்பிற்கு ஆளானதாக அந்த பெண் அதிகாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த ஜம்மு காஷ்மீர் ஐகோர்ட்டு, குற்றம்சாட்டப்பட்ட விமானப்படை உயரதிகாரிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், "விமானப்படை நிலையத்தில் விங் கமாண்டராக பணிபுரிந்து வருபவர் கைது செய்யப்பட்டால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அதே சமயம் வழக்கு விசாரணையை தொடர கோர்ட்டு அனுமதி அளிக்கிறது. எனினும், கோர்ட்டின் அனுமதியின்றி இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.