குடியரசு தின விழா அணிவகுப்பு: உத்தராகண்ட் மாநில அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு...!
|துணை ராணுவப் படைகளில், ரிசர்வ் போலீஸ் படை முதல் பரிசை வென்றது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த மாதம் 26-ம் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் பல மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன.
இதில் உத்தரா கண்ட் மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு கிடைத்தது. இந்த அலங்கார ஊர்தியில் உத்தராகண்ட் மாநிலத்தின் வன விலங்குகள் மற்றும் பறவைகள் இடம் பெற்றிருந்தன. அலங்கார ஊர்தியின் முன் பகுதியில் கார்பட் தேசிய பூங்காவின் கலைமான், கஸ்தூரி மான் இனங்கள், தேசிய பறவை மயில், கோரல் பறவை உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. அலங்கார ஊர்தியின் பின் பகுதியில் ஜகேஷ்வர் தாம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள பழங்கால கோயில்கள் இடம் பெற்றிருந்தன.
பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பில், இந்திய ராணுவத் தின் காலாட் படை, பஞ்சாப் படைப் பிரிவு, மராத்தா படைப் பிரிவு, டோக்ரா படைப் பிரிவு, பிஹார் படைப் பிரிவு, கூர்கா படைப் பிரிவுகள் பங்கேற்றன. இவற்றில் பஞ்சாப் படைப்பிரிவை சிறந்த அணியாக நடுவர் குழு தேர்வு செய்தது. துணை ராணுவப் படைகளில், ரிசர்வ் போலீஸ் படை முதல் பரிசை வென்றது.
மத்திய அமைச்சகங்கள், அரசுத் துறைகளின் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி சிறப்பு பரிசை வென்றது. மத்திய பொதுப் பணித்துறை சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தி, 'வந்தே பாரதம்' நடனக் குழுவினருக்கு சிறப்பு பரிசு கிடைத்தது.