டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம்: சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எகிப்து அதிபர் சிசி
|டெல்லியில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் எல் சிசி கலந்து கொண்டார்.
புதுடெல்லி,
நமது நாடு விடுதலை பெற்றதைத்தொடர்ந்து, நமக்கென அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டு, 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த நாள் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக நமது நாட்டில் கொரோனா தொற்றால் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக நட்பு நாடுகளின் தலைவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை.
இந்த ஆண்டு கொரோனா தொற்று கிட்டத்தட்ட முற்றிலுமாய் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், நாட்டின் 74-வது குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் எல் சிசி அழைக்கப்பட்டார்.
இந்த ஆண்டு குடியரசு தின விழா, டெல்லியில் இந்தியா கேட் மற்றும் ஜனாதிபதி மாளிகை இடையேயான புதுப்பிக்கப்பட்ட கடமைப்பாதையில் (முந்தைய ராஜபாதை) முதல் முறையாக கோலாகலமாக நடைபெற்றது.
முதல் நிகழ்வாக பிரதமர் மோடி தேசிய போர் நினைவுச்சின்னத்துக்கு வந்து மலர்வளையம் வைத்து நாட்டுக்காக தங்கள் இன்னுயிர் நீத்த வீரர்களின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அங்கு பிரதமர் மோடி முதலிலும், அவரைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் வந்தனர்.
ஜனாதிபதி கொடி ஏற்றினார்
அவர்களைத் தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினர் எல் சிசியுடன் அங்கு வருகை தந்தார். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். அவர்களுக்கு படைத்தலைவர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நமது தேசியக்கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டர்கள் மலர்கள் தூவின. தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இன்னொரு புறம் 21 குண்டுகள் முழங்கின. ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர் திரவுபதி முர்மு முதல் முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்தது குறிப்பிடத்தக்கது.
தனிமேடையில் தலைவர்கள்
தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, சிறப்பு விருந்தினரான எகிப்து அதிபர் எல் சிசி ஆகியோர் அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு அணிவகுப்பு தொடங்கியது.
இந்த அணிவகுப்பில் நமது நாட்டின் படை பலத்தை பறை சாற்றும் வகையில் அர்ஜூன் பீரங்கி, நாக் ஏவுகணை அமைப்பு, கே-9 வஜ்ரா அணிவகுப்புக்கு கம்பீரம் சேர்த்தன.
பெண் சக்தியை எடுத்துக்காட்டும் வகையில், லெப்டினன்ட் சேத்தனா சரமா தலைமையில் ஆகாஷ் ஆயுத அமைப்பு இடம் பெற்றிருந்தது.
இந்த ஆண்டு ராணுவ அணிவகுப்பில் 144 வீரர்களைக் கொண்ட எகிப்து நாட்டின் படைப்பிரிவும் இடம் பெற்றிருந்தது சிறப்பு.
குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக அக்னி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
23 அலங்கார ஊர்திகள்
நமது நாட்டின் துடிப்பான பன்முக கலாசாரத்தை, பொருளாதாரத்தை, சமூக முன்னேற்றத்தை பிரதிபலிக்கிற வகையில் தமிழ்நாடு, அசாம், மராட்டியம், உத்தரபிரதேசம், காஷ்மீர், குஜராத், மேற்கு வங்காளம் உள்பட மொத்தம் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 17 அலங்கார ஊர்திகளும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் துறைகள் சார்பில் 6 அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து வந்து கண்களுக்கு விருந்தாக அமைந்தன. அலங்கார ஊர்திகளில் பெரும்பாலானவற்றில் பெண் சக்தியை எடுத்துக்காட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
'மூத்த படை வீரர்கள் அர்ப்பணிப்புடன் இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டை நோக்கி' என்ற கருப்பொருளைக் கொண்ட வீரர்கள் ஊர்தியில், பரம்வீர் சக்ரா விருது பெற்ற 3 வீரர்களும், அசோக சக்ரா விருது பெற்ற 3 பேரும் இடம் பெற்றிருந்தனர்.
குடியரசு தின விழா அணிவகுப்பை கண்டு மகிழ சென்டிரல் விஸ்டா திட்ட கட்டுமான பணியாளர்கள், பால், காய்கறி விற்பனையாளர்கள், தெரு வியாபாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.
'வந்தே பாரதம்' நடன போட்டி
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சக்கரங்களைக் கொண்ட அதிநவீன கவச மேடை, 70 டன் டிரெய்லரில் கொண்டு வரப்பட்டு டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டது.
'வந்தே பாரதம்' நடன போட்டியின் மூலம் நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 479 கலைஞர்களின் (326 பெண்கள் மற்றும் 153 ஆண்கள்) கலாசார நடன நிகழ்ச்சி, கலாசார துறையின் அலங்கார ஊர்தியில் இடம் பெற்றிருந்தது.
முதல் முறையாக ஒட்டகங்களில் வீராங்கனைகள் அமர்ந்து வந்து அணிவகுப்பில் பங்கேற்று, பல்வேறு துறைகளில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கி இருப்பதை எடுத்துக்காட்டினர்.
உலகிலேயே முதல் முறையாக பெண்களை ஆயுதம் ஏந்திய பட்டாலியனாக உருவான மத்திய ஆயுதப்படையின் அனைத்து மகளிர் படைப்பிரிவு உதவி கமாண்டண்ட் பூனம் குப்தா தலைமையில் அணிவகுப்பில் பங்கேற்றது.
மனித பிரமிடு
'கார்ப்ஸ் ஆப் சிக்னல்ஸ் டேர் டெவில்ஸ்' அணியினர் தங்கள் செயல்திறனால் பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். இந்த அணியின் எதற்கும் துணிந்த 33 வீரர்கள், மோட்டார் சைக்கிள்களில் மனித பிரமிடு உருவாக்கிக் காட்டி அசத்தினர்.
இந்திய விமானப்படையின் 45 போர் விமானங்கள், கடற்படையின் ஒரு போர் விமானம், ராணுவத்தின் 4 ஹெலிகாப்டர்கள் வானில் சாகசங்கள் காட்டி மகிழ்வித்தன.
மத்திய மந்திரிகள்
டெல்லி குடியரசு தின விழாவில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், கிஷன் ரெட்டி, அஷ்விணி வைஷ்ணவ், கிரண் ரிஜிஜூ, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஸ்மிரிதி இரானி, தர்மேந்திர பிரதான், அனுராக் தாக்குர், அர்ஜூன்முண்டா, மீனாட்சி லேகி, டெல்லி துணை நிலை கவர்னர் சக்சேனா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு அணிவகுப்பை பார்வையிட்டனர்.
முப்படை தளபதிகள் மனோஜ் பாண்டே (ராணுவம்), வி.ஆர்.சவுத்ரி (விமானப்படை), ஹரிகுமார் (கடற்படை) ஆகியோரும் குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு அணிவகுப்பை பார்த்தனர்.
குடியரசு தின விழாவை ஏறத்தாழ 65 ஆயிரம் பேர் கண்டுகளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விழாவுக்காக தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது.
ராஜஸ்தான் தலைப்பாகையில் மின்னிய பிரதமர் மோடி
பிரதமர் மோடி சுதந்திர தின விழா, குடியரசு தின விழா போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் விதவிதமான தலைப்பாகைகளில் வந்து அசத்துவதை வழக்கப்படுத்தி உள்ளார்.
அந்த வகையில் டெல்லியில் நேற்று நடந்த 74-வது குடியரசு தின விழாவுக்கு அவர் பல நிறங்களைக் கொண்ட ராஜஸ்தானி தலைப்பாகை அணிந்து வந்திருந்தார். பார்க்க பளிச்சென்றிருந்த இந்த தலைப்பாகை, இந்தியாவின் பன்முகத்தன்மையை காட்டுவதாக அமைந்தது. இது அனைவரையும் கவர்ந்தது.
அவர் வெள்ளை நிற குர்தா, கருப்பு கோட் மற்றும் பேண்ட் அணிந்திருந்தார். வெள்ளை நிற அங்க வஸ்திரமும் அணிந்திருந்தார்.
கடந்த ஆண்டு குடியரசு தின விழாவின்போது, பிரதமர் மோடி உத்தரகாண்ட் பாரம்பரிய தொப்பி அணிந்து வந்திருந்தது நினைவுகூரத்தக்கது.