< Back
தேசிய செய்திகள்
குடியரசு தினவிழா கொண்டாட்டம்: டெல்லியில் 17 மாநில அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு
தேசிய செய்திகள்

குடியரசு தினவிழா கொண்டாட்டம்: டெல்லியில் 17 மாநில அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

தினத்தந்தி
|
26 Jan 2023 11:58 AM IST

குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் 17 மாநில அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.

புதுடெல்லி,

நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாப்பட்டு வருகிறது. விழா நடைபெறும் இடத்திற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி வருகை தந்தனர். எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதற்கு முன்பாக,

டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இதையடுத்து, கடமைப்பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் குடியரசு தின விழா இதுவாகும். அவர் கொடியேற்றிய போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ண கொடியை ஏற்றிய பிறகு அணி வகுப்பு தொடங்கியது. கடமைப் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கிய அணிவகுப்பு விஜய் சவுக், இந்தியா கேட், செங்கோட்டை வரை நடைபெற்று வருகிறது. ராணுவ பிரிவில் முப்படைகளுடன் குதிரை படை மட்டுமின்றி ஒட்டக படையும் இடம் பெற்றது. கடற்படையில் 144 இளம் மாலுமிகள் பங்கேற்றனர். முதல் முறையாக 3 பெண் அதிகாரிகளும், 6 அக்னி வீரர்களும் கலந்து கொண்டது சிறப்பாகும்.

விமான படையில் 4 அதிகாரிகளுடன் 148 வீரர்கள் அணிவகுத்தனர். 148 தேசிய மாணவர் படையினரும், 448 நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர். அணி வகுப்பில் எகிப்து நாட்டு படை பிரிவும் பங்கேற்றது.

மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளின் அலங்கார அணிவகுப்பு, குழந்தைகளின் கலாசார நிகழ்ச்சிகள், மோட்டார் சைக்கிள் சாகசங்கள் உள்ளிட்டவையும் இடம் பெற்றன. அணி வகுப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்று வருகின்றன.

6 துறைகளின் அலங்கார ஊர்திகளும் கலந்து கொண்டன. நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்