நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதல் வாரம் தொடங்க உள்ளதாக தகவல்
|இந்த ஆண்டு பழைய நாடாளுமன்ற கட்டடத்திலேயே குளிர்கால கூட்டத்தொடரை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
நடப்பு ஆண்டிற்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி வரும் டிசம்பர் 7-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை குளிர்கால கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் 1,200 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வரும் நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் கட்டட பணிகள் இன்னும் நிறைவடையாததால், இந்த ஆண்டு பழைய கட்டடத்திலேயே குளிர்கால கூட்டத்தொடரை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.