< Back
தேசிய செய்திகள்
கர்நாடகா சாம்ராஜ் நகர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு
தேசிய செய்திகள்

கர்நாடகா சாம்ராஜ் நகர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு

தினத்தந்தி
|
29 April 2024 12:03 PM IST

கர்நாடகாவில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு கடந்த 26-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள இன்டிநத்த கிராமம் உள்பட 5 கிராம மக்கள் 26-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். இதுபற்றி அறிந்த தேர்தல் அதிகாரிகள் கிராம மக்களிடம் ஓட்டுப்போட வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்திய வேளையில் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வாக்குச்சாவடியை சூறையாடினர். இன்டிநத்த கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமடைந்ததாக வெளியான தகவலை அடுத்து அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், இன்டிநத்த கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. கிராம மக்கள் விறுவிறுப்புடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

கிராமங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் முடிவு செய்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. உள்ளூர் அதிகாரிகள் அளித்த உறுதிமொழி மற்றும் முயற்சிக்கு பிறகு, அங்கு மறுவாக்குப்பதிவு நடந்து வருகிறது. கர்நாடகத்தில் கடந்த 26-ம் தேதி முதல்கட்டமாக 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

மேலும் செய்திகள்