காவலரைத் தாக்க முயன்ற காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி மீது வழக்குப்பதிவு
|தெலுங்கானாவில் நடந்த போராட்டத்தின் போது காவலரைத் தாக்க முயன்றதாக காங்கிரஸ் தலைவர் ரேணுகா சவுத்ரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் கடந்த 3 தினங்களாக தீவிர விசாரணை நடத்தினர். மூன்றாவது நாளாக நேற்றும் விசாரணை நடைபெற்றது.
தொடர்ந்து நாளை விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து காங்கிரஸ் சார்பில் டெல்லி உட்பட நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்ற நிலையில், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் அமலாக்கத் துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது, காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ரேணுகா சவுத்ரி தடுப்புப் பணியிலிருந்த காவலர் ஒருவரின் சட்டையைப் பிடித்து ஆவேசமாகப் பேசினார்.
இதனை, சமூக வலைதளத்தில் பலரும் கண்டித்து வரும் வேளையில் ரேணுகா சௌத்ரி மற்றும் தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் மீது ஐபிசி பிரிவு 353 (பொது ஊழியரை அவரது பணியை செய்யவிடாமல் தடுக்க தாக்குதல் நடத்தியது) கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
முன்னதாக இதுதொடர்பாக ரேணுகா சௌத்ரி தனது டுவிட்டரில், "நீங்கள் முழு வீடியோவையும் பாருங்கள். போலீசார் திடீரென தள்ளி விட்டனர். பின்னால் இருந்து நான் முன்னே தள்ளப்பட்டேன். இதனால், நான் கீழே விழுந்து இருக்க கூடும். அதனால், காவலரின் தோள்பட்டையை பிடிக்க நான் முயற்சி செய்தேன். கீழே விழுந்து விட கூடாது என்பதற்காகவே நான் காவலரின் காலரை பிடித்தேன். இதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்திருந்தார்.