< Back
தேசிய செய்திகள்
எனது சகோதரரின் மகனின் சாவுக்கு போலீசாரே காரணம்; ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. ஆவேசம்
தேசிய செய்திகள்

எனது சகோதரரின் மகனின் சாவுக்கு போலீசாரே காரணம்; ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. ஆவேசம்

தினத்தந்தி
|
6 Nov 2022 12:15 AM IST

தனது சகோதரரின் மகனின் சாவுக்கு போலீசாரே காரணம் என்று ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. ஆவேசமாக கூறினார்.

சிக்கமகளூரு:

தனது சகோதரரின் மகனின் சாவுக்கு போலீசாரே காரணம் என்று ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. ஆவேசமாக கூறினார்.

ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.

தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ரேணுகாச்சார்யா. முன்னாள் மந்திரியான இவர், தற்போது முதல்-மந்திரியின் அரசியல் செயலாளராகவும் இருந்து வருகிறார். இவரது சகோதரர் ரமேசின் மகன் சந்திரசேகர். கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்து காரில் வெளியே சென்ற சந்திரசேகர் காணாமல் போனார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒன்னாளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நியாமதி-ஒன்னாளி அருகே கடதகட்டே கிராமத்தில் ஓடும் துங்கா கால்வாயில் சந்திரசேகர் காருடன் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா, தற்கொலையா அல்லது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசாரே காரணம்

இந்த நிலையில் நேற்று ஒன்னாளியில் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது சகோதரரின் மகன் சந்திரசேகரை யாரோ மர்ம நபர்கள் சித்ரவதை செய்து, கை, கால்களை கட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை காரில் வைத்து அங்கு கொண்டு வந்து கால்வாயில் வீசி உள்ளனர். ஆனால் இதை போலீசார் மறுக்கிறார்கள். அவர்கள் கட்டுக்கதை சொல்கிறார்கள். என் மகனை கொலை செய்தவர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் மெத்தனமாக இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. என் மகனின் சாவுக்கு போலீசாரின் அலட்சியப்போக்கே காரணம். என் மகன் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக ஒரு போலீஸ் அதிகாரி கூறுகிறார். என் மகன் எங்கு இருக்கிறான் என்பதை கண்டறிய தவறிய போலீசார் அவனது மரணத்துக்கு விபத்துதான் காரணம் என்று எப்படி உறுதி செய்ய முடியும். என் மகன் காருடன் கால்வாயில் இறந்து கிடந்ததை கண்டு பிடித்ததே என் தொகுதி மக்கள்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

சித்ரவதை செய்து...

இந்த சந்தர்ப்பத்தில் ரேணுகாச்சார்யாவின் சகோதரர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது மகன் சந்திரசேகரின் கையில் கயிறு கட்டப்பட்டதற்காக அடையாளம் உள்ளது. ஆனால் போலீசார் சரியாக விசாரிக்காமல் கட்டுக்கதை சொல்கிறார்கள். அவர்களின் கட்டுக்கதையை கேட்க எனக்கு நேரமில்லை.

நான் ஆவேசமாக இதை சொல்லவில்லை. உண்மையை பேசுகிறேன். என் மகனை யாரோ மர்ம நபர்கள் கடத்தி சித்ரவதை செய்து கொன்றுவிட்டார்கள். அதுதான் உண்மை. என் மகனுடன் கடைசியாக இருந்த கிரணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒருமையில் பேசினார்

இதற்கிடையே சம்பவ இடத்தில் நேற்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்த தடயங்களையும் கைப்பற்றினர். ஆனால் அவர்கள் கைப்பற்றிய தடயங்கள் குறித்த தகவல்களை வெளியிட மறுத்துவிட்டனர். இதற்கிடையே நேற்று மாலையில் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ.வை காண ஒரு போலீஸ் அதிகாரி அவரது வீட்டுக்கு சென்றார்.

அப்போது அவரை வீட்டுக்குள் விடாமல் 'நீ யார், எதற்காக இங்கு வந்தாய்' என்று ஆவேசமாக ஒருமையில் ரேணுகாச்சார்யா பேசி அந்த போலீஸ் அதிகாரியை விரட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்