< Back
தேசிய செய்திகள்
மகளின் பிறந்தநாளை கொண்டாட சுவர்ண விதான சவுதாவை வாடகைக்கு தாருங்கள்; சபாநாயகருக்கு வக்கீல் கடிதம்
தேசிய செய்திகள்

மகளின் பிறந்தநாளை கொண்டாட சுவர்ண விதான சவுதாவை வாடகைக்கு தாருங்கள்; சபாநாயகருக்கு வக்கீல் கடிதம்

தினத்தந்தி
|
23 Dec 2022 2:33 AM IST

மகளின் பிறந்தநாளை கொண்டாட பெலகாவி சுவர்ண விதான சவுதாவை வாடகைக்கு தரும்படி, சபாநாயகருக்கு வக்கீல் ஒருவர் கடிதம் எழுதி உள்ளார்.

பெலகாவி:

சுவர்ண விதான சவுதா

பெங்களூருவில் உள்ள விதான சவுதா சட்டசபை கட்டிடம் போல பெலகாவியிலும் சுவர்ண விதான சவுதா என்ற பெயரில் சட்டசபை கட்டிடம் உள்ளது. பெலகாவி சுவர்ண விதான சவுதாவில் ஆண்டுக்கு 10 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடர் நடப்பது வழக்கம். தற்போது அங்கு குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதனால் முதல்-மந்திரி, மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பெலகாவியில் தங்கி இருந்து கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள்.

ஆண்டுக்கு 10 நாட்கள் மட்டும் நடக்கும் குளிர்கால கூட்டத்தொடருக்கு பின்னர் பெலகாவி சுவர்ண விதான சவுதாவுக்கு யாரும் செல்வது இல்லை. இதனால் ஆண்டுக்கு 10 நாட்கள் தவிர மற்ற 355 நாட்கள் சுவர்ண விதான சவுதா பூட்டியே தான் கிடக்கிறது.

வாடகைக்கு தரும்படி....

இந்த நிலையில் பெலகாவி மாவட்டம் கோகாக் தாலுகா கட்டபிரபாவை சேர்ந்த வக்கீலான மல்லிகார்ஜூன் என்பவர், கர்நாடக சட்டசபை சபாநாயகர் காகேரிக்கும், பெலகாவி மாவட்ட கலெக்டருக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் 10 நாட்கள் நடக்கும் கூட்டத்தொடரை தவிர்த்து மற்ற நாட்களில் சுவர்ண விதான சவுதா பூட்டியே தான் கிடக்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகள் நடத்த சுவர்ண விதான சவுதாவை வாடகைக்கு விட வேண்டும்.

இதன்மூலம் அரசுக்கு வருமானமும் கிடைக்கும். எனது மகள் வாணிஸ்ரீக்கு ஜனவரி 30-ந் தேதி 5 வயது முடிந்து 6-வது வயது பிறக்க உள்ளது. அவளது பிறந்தநாளை சுவர்ண விதான சவுதாவில் கொண்டாட வேண்டும் என்று ஆசையாக உள்ளது. எனது மகள் பிறந்தநாளை கொண்டாட சுவர்ண விதான சவுதாவை வாடகைக்கு தர வேண்டும். அங்கு வைத்து பிறந்தநாள் கொண்டாடுவது எனது மகள் வாழ்வில் பொன்னான தருணமாக இருக்கும் என்று கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.

மல்லிகார்ஜூன் கேட்டு கொண்டபடி சுவர்ண விதான சவுதாவில் வைத்து பிறந்தநாள் கொண்டாட சபாநாயகர் அனுமதி தருவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்