மதுராவில் கிருஷ்ண ஜென்ம பூமியில் உள்ள மசூதியை அகற்றக் கோரிய வழக்கு; விசாரணைக்கு கோர்ட்டு அனுமதி!
|இதற்கு முன்பு தொடரப்பட்ட இந்த வழக்குகளை ஏற்க முடியாது என்று மதுராவில் உள்ள சிவில் கோர்ட்டு முன்பு தள்ளுபடி செய்திருந்தது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலதின் ஆக்ரா நகருக்கு வடக்கே 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள நகரம் மதுரா. மதுராவை சுற்றியுள்ள கோகுலம், பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிருஷ்ண ஜென்ம பூமியாக உத்தர பிரதேச அரசு அறிவித்தது. கிருஷ்ணரின் பிறப்பிடம் என்று நம்பப்படும் கிருஷ்ண ஜன்ம பூமிக்கு அருகில் ஷாஹி இத்கா மசூதி அமைந்துள்ளது.
கிருஷ்ணர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதியை அகற்றக் கோரி வெவ்வேறு இந்து குழுக்கள் மதுரா நீதிமன்றத்தில் தனித்தனியாக பத்து மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
இதற்கு முன்பு தொடரப்பட்ட இந்த வழக்குகளை ஏற்க முடியாது என்று மதுராவில் உள்ள சிவில் கோர்ட்டு முன்பு தள்ளுபடி செய்திருந்தது. '1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் கீழ், இவற்றை ஏற்க முடியாது என்று தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால், ஏராளமான பக்தர்கள் கோர்ட்டில் இதுபோன்ற பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்யலாம்.
அப்போது இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் மேல்முறையீடு செய்தனர். கிருஷ்ணரின் உண்மையான பிறந்த இடத்தில் வழிபாடு நடத்த தங்களுக்கு உரிமை உள்ளது என்று மனுதாரர்கள் கூறுகின்றனர். கேசவ் தேவ் கோவிலின் 13.37 ஏக்கர் வளாகத்தில் மசூதி கட்டப்பட்டது என்றும், இங்குதான் பகவான் கிருஷ்ணன் பிறந்தார் என்று பெரும்பான்மை இந்து சமூகம் நம்புவதாக மனுவில் கூறப்பட்டு உள்ளது.ஒரு காலத்தில் கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது என்று மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் ஷைலேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதியை அகற்றக் கோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கலாம் என்று உத்தரபிரதேச கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. அதாவது இந்த வழக்குகளை கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
இதனிடையே, வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்குள் ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு காரணமாக, மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி பகுதி உள்பட மதுரா மாவட்டம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஆக்ரா கூடுதல் காவல்துறை இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.