< Back
தேசிய செய்திகள்
கடும் எதிர்ப்பு எதிரொலி: அரசு அலுவலகங்களில் வீடியோ-படம் எடுக்க விதித்த தடை நீக்கம் - கர்நாடக அரசு உத்தரவு
தேசிய செய்திகள்

கடும் எதிர்ப்பு எதிரொலி: அரசு அலுவலகங்களில் வீடியோ-படம் எடுக்க விதித்த தடை நீக்கம் - கர்நாடக அரசு உத்தரவு

தினத்தந்தி
|
17 July 2022 2:13 AM IST

கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அரசு அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளை பொதுமக்கள் புகைப்படம்-வீடிேயா எடுக்க விதித்த தடையை ஒரே நாளில் நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

புகைப்படம் எடுக்க தடை

கர்நாடகத்தில் அரசு அலுவலகங்களுக்கு அரசின் சேவைகளை பெற வரும் பொதுமக்கள் தங்களது செல்போனில் அலுவலகம் மற்றும் அதிகாரிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடை விதித்து நேற்று முன்தினம் கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதாவது அலுவலகங்களுக்கு அரசின் சேவைகளை பெற வரும் பொதுமக்கள், அதிகாரிகள் ஏதாவது பேசினாலோ அல்லது லஞ்சம் பெற்றாலோ, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்கள். அரசு அதிகாரிகள், பெண் ஊழியர்களையும் புகைப்படம் எடுத்து சமூகக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்.

இதுபற்றி அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் புகைப்படம், வீடியோக்களை எடுத்து வெளியிடுவதால் பெண் ஊழியர்கள் பெரும் பாதிக்கப்படுகின்றனர் என்று அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. அந்த புகாரை பரிசீலித்து உடனடியாக அரசு அலுவலகங்களில் பணி நேரத்தின் போது அரசின் சேவைகளை பெற வரும் பொதுமக்கள் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

இதற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநிலத்தில் தற்போது ஊழல் ஆட்சி நடக்கிறது. மந்திரிகள் 40 சதவீத கமிஷன் கேட்கிறாா்கள். இந்த ஊழல் அரசு அலுவலகங்களில் இருந்து தான் தொடங்குகிறது, ஊழல் பிற முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கத்தில் அரசு அலுவலகங்களில் புகைப்படம், வீடியோ எடுக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கடுமையாக விமர்சித்து இருந்தார்.

மேலும் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதை ஆதாரத்துடன் நிரூபிக்க கூடாது என்பதற்காகவும், ஊழலுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர்களை ஒடுக்கும் விதமாகவும், மக்களின் வாயை அடைக்க வேண்டும் என்பதற்காகவும் அரசு இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டு கூறி இருந்தனர். அரசு அலுவலகங்களில் புகைப்படம், வீடியோ எடுக்க அனைத்து தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், அதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தீவிரமாக ஆலோசனை நடத்தினார்.

தடை உத்தரவு ரத்து

மேலும் அரசு அலுவலகங்களில் புகைப்படம், வீடியோ தடை விதிப்பதால் அரசுக்கு தான் தேவையில்லாத கெட்ட பெயர் ஏற்படுவதால், அந்த உத்தரவை ரத்து செய்யும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவுறுத்தி இருந்தார். இதையடுத்து, சாதாரண அரசு அலுவலகங்களில் இருந்து விதானசவுதா வரையிலான அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணி நேரத்தின் போது அரசின் சேவைகளை பெறுவதற்காக வரும் பொதுமக்கள் புகைப்படம், வீடியோ எடுக்க பிறப்பிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவை கர்நாடக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

இந்த உத்தரவு நேற்று முதலே அமலுக்கு வந்தது. எனவே அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எப்போதும் போல் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். எதிர்க்கட்சிகள், பொதுமக்களின் எதிர்ப்புக்கு அடிபணிந்துள்ள அரசு, நேற்று முன்தினம் பிறப்பித்த தடை உத்தரவை 24 மணிநேரத்திற்குள் திரும்ப பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசின் இந்த உத்தரவை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்