வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்; 'இந்தியா' கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி - ஜெய்ராம் ரமேஷ்
|வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டிருப்பது விவசாயிகளுக்காக ‘இந்தியா’ கூட்டணி பெற்ற மகத்தான வெற்றி என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உள்நாட்டு சந்தையில் வெங்காய விலையை கட்டுக்குள் வைக்கவும், போதிய அளவு கையிருப்பை உறுதி செய்யவும் கடந்த டிசம்பர் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதனால் அண்டை நாடுகளில் வெங்காயம் விலை உயர்ந்தது.
இதனிடையே கடந்த மாத இறுதியில் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான், பஹ்ரைன், மொரீசியஸ் மற்றும் இலங்கை ஆகிய 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. மேலும் மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2,000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுமையாக நீக்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதே நேரத்தில், வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலை டன் ஒன்றுக்கு 550 டாலராக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டிருப்பது காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"இன்று காங்கிரஸ் கட்சி மற்றும் 'இந்தியா' கூட்டணி நமது விவசாயிகளுக்காக மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. பல மாத அழுத்தத்திற்குப் பிறகு, மோடி அரசு வெங்காய ஏற்றுமதி மீதான தடையை திரும்பப் பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் விவசாயிகளின் பிரச்சினைகளில் பிரதமரின் அக்கறையின்மை இன்னும் தொடர்கிறது. வெங்காய ஏற்றுமதிக்கான 40% ஏற்றுமதி வரியை மத்திய அரசு அப்படியே வைத்திருக்கிறது.
பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது ராகுல் காந்தி அறிவித்தபடி விவசாயப் பொருட்களுக்கான நிலையான இறக்குமதி-ஏற்றுமதி கொள்கையை உருவாக்குவோம் என காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் அளித்தது.
ஜூன் 4-ந்தேதி'இந்தியா' கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் போது, இந்த கொடூரமான மற்றும் தன்னிச்சையான ஏற்றுமதி தடைகள் மற்றும் வரிகள் நீங்கும்."
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் பதிவிட்டுள்ளார்.