வெள்ளம் பாதித்த பகுதிகளில் சாலைகளை சீரமைக்க ரூ.500 கோடி விடுவிப்பு; கர்நாடக அரசு உத்தரவு
|வெள்ளம் பாதித்த பகுதிகளில் சாலைகளை சீரமைக்க ரூ.500 கோடி விடுவித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர பகுதிகளான தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி மற்றும் மலைநாடு பகுதிகளான குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏற்கனவே உடுப்பியில் அறிவித்து இருந்தார்.
அதன்படி வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சாலைகளை சீரமைக்க ரூ.500 கோடி விடுவித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சாலைகள், பாலங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் சீரமைக்கப்படும். அதற்காக முதல்கட்டமாக ரூ.500 கோடி நிதியை விடுவித்துள்ளோம். இந்த பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படும்' என்றார்.