< Back
தேசிய செய்திகள்
17-வது முறையாக நடந்த இந்திய-சீன பேச்சுவார்த்தை குறித்து கூட்டறிக்கை வெளியீடு
தேசிய செய்திகள்

17-வது முறையாக நடந்த இந்திய-சீன பேச்சுவார்த்தை குறித்து கூட்டறிக்கை வெளியீடு

தினத்தந்தி
|
23 Dec 2022 8:52 AM IST

17-வது முறையாக நடந்த இந்திய-சீன பேச்சுவார்த்தை குறித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.



புதுடெல்லி,

லடாக் மோதலுக்குப்பின் இந்திய-சீன எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்படுத்துவதற்காக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த வரிசையில் 17-வது முறையாக கடந்த 20-ந்தேதி இரு நாட்டு அதிகாரிகளும் சுசுல்-மோடோ எல்லையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அருணாசல பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே மோதல் நடந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் சுமார் 10 மணி நேரமாக நடந்த இந்த பேச்சுவார்த்தையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளன.

அதில், 'கடந்த ஜூலை 17-ந்தேதி நடந்த கூட்டத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அடிப்படையில், மேற்கு பிராந்தியத்தில் அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டுடன் தொடர்புடைய சிக்கல்களைத் தீர்ப்பது குறித்து இருதரப்பும் வெளிப்படையாக மற்றும் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்' என கூறப்பட்டு உள்ளது.

மேலும், இருநாட்டு தலைவர்களின் வழிகாட்டுதலின் படி, மேற்கு பிராந்திய எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க உதவும் எஞ்சிய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்