நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகள் 42 பேர் விடுதலை
|கர்நாடகத்தில் நன்னடத்தை அடிப்படையில் 42 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மந்திரிசபை முடிவு செய்துள்ளதாக சட்டத்துறை மந்திரி மாதுசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நன்னடத்தை அடிப்படையில் 42 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மந்திரிசபை முடிவு செய்துள்ளதாக சட்டத்துறை மந்திரி மாதுசாமி கூறியுள்ளார்.
மானியத்தில் 20 ஆடுகள்
கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் ஆடு மேய்ப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு 20 ஆயிரம் ஆடு மேய்ப்போருக்கு தலா 20 ஆடுகள் மானிய விலையில் வழங்கப்படும். இதற்காக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் 20 ஆடுகளுடன் ஒரு ஆட்டுக்கிடாவும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு வங்கி கடன் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அதாவது ஒருவருக்கு ரூ.1.75 லட்சம் வழங்கப்படுகிறது.
சொத்து விவரங்கள்
அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதிக்குள் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையில் திருத்தம் செய்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். கர்நாடகத்தில் உள்ள அரசு மின் வினியோக நிறுவனங்களுக்கு ரூ.8 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர தின பவள விழாவையொட்டி 2-வது கட்டமாக கர்நாடக சிறையில் உள்ள 42 ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கவர்னருக்கு பரிந்துரை செய்யப்படும். பெங்களூரு அருகே உள்ள கர்நாடக வீட்டு வசதி வாரியத்தின் சூரியநகர் 2-வது ஸ்டேஜ் பகுதியில் ராஜகால்வாய் பணிகளை மேற்கொள்ள ரூ.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாதுசாமி கூறினார்.