< Back
தேசிய செய்திகள்
ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் பணியிடை நீக்கம்: மீண்டும் பணி வழங்க கோரிய கல்வி அதிகாரிகளின் மனுக்கள் நிராகரிப்பு - கர்நாடக அரசு உத்தரவு
தேசிய செய்திகள்

ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் பணியிடை நீக்கம்: மீண்டும் பணி வழங்க கோரிய கல்வி அதிகாரிகளின் மனுக்கள் நிராகரிப்பு - கர்நாடக அரசு உத்தரவு

தினத்தந்தி
|
12 Nov 2022 12:15 AM IST

ஆசிரியர் தேர்வு முறைகேட்டில் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் மீண்டும் தங்களுக்கு பணி வழங்க கோரி அரசிடம் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை கர்நாடக அரசு நிராகரித்தது.

பெங்களூரு:

38 பேர் கைது

கர்நாடகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2012-13, 2014-15-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்கள், அதிகாரிகள் உள்பட 38 பேரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பலருக்கு தொடர்பு இருப்பதும், பல லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சி.ஐ.டி. போலீசாரால், ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் கர்நாடக பாடநூல் கழக உயர் அதிகாரிகள் மாதேகவுடா, கீதா ஆகியோரும் சி.ஐ.டி. விசாரணையில் சிக்கினர்.

மனுக்கள் ரத்து

இதையடுத்து அவர்களை பணி இடைநீக்கம் செய்தும், துறைரீதியான விசாரணைக்கும் கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் மாதேகவுடா, கீதா ஆகியோர் சார்பில் பள்ளி கல்வி துறைக்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில் தங்கள் மீதான விசாரணையை ரத்து செய்ய கோரியும், மீண்டும் பணியில் சேர்த்து கொள்ளுமாறும் கோரி இருந்தனர்.அந்த மனுவை பரிசீலனை செய்த அரசு, கைது செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு பதிலாக தற்காலிக அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறியது. எனவே சி.ஐ.டி. விசாரணை முடியும் வரை அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க முடியாது என கூறி அவர்களது மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்