< Back
தேசிய செய்திகள்
காங்கிரஸ் அடங்கிய எதிர்க்கட்சி அணியை உருவாக்க வலியுறுத்தல் - நிதிஷ்குமார், சரத்பவார், யெச்சூரி ஒரே மேடையில் பங்கேற்பு
தேசிய செய்திகள்

காங்கிரஸ் அடங்கிய எதிர்க்கட்சி அணியை உருவாக்க வலியுறுத்தல் - நிதிஷ்குமார், சரத்பவார், யெச்சூரி ஒரே மேடையில் பங்கேற்பு

தினத்தந்தி
|
26 Sept 2022 4:17 AM IST

காங்கிரஸ் அடங்கிய எதிர்க்கட்சி அணியை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி நிதிஷ்குமார், சரத்பவார், யெச்சூரி ஒரே மேடையில் பங்கேற்றனர்.

சண்டிகார்,

மறைந்த முன்னாள் துணை பிரதமரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் நிறுவனருமான தேவிலால் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரியானா மாநிலம் பதேகாபாத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு லோக்தளம் கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

அதில், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் ஒரே மேடையில் பங்கேற்றனர். பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, லோக்தளம் தலைவர் சவுதாலா, ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், அகாலிதளம் தலைவர் சுக்பிர்சிங் பாதல், சிவசேனா கட்சியை சேர்ந்த அரவிந்த் சவ்ந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்தில் நிதிஷ்குமார் பேசியதாவது:-

நாட்டுக்கு இப்போதைய தேவை காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் அடங்கிய ஒரே அணி. அத்தகைய பிரதான எதிர்க்கட்சி அணிதான், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எளிதாக தோற்டிக்கும். நமக்கு 3-வது அணி தேவையில்லை. நான் பிரதமர் பதவி வேட்பாளர் அல்ல.

பா.ஜனதா அல்லாத கட்சிகள் ஒன்றுபட்டால், பா.ஜனதாவின் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கலாம். காங்கிரஸ், இடதுசாரிகள் இல்லாத எதிர்க்கட்சி அணி சாத்தியம் இல்லை. மேடையில் உள்ள தலைவர்கள் இந்த ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும். நாட்டில் இந்து-முஸ்லிம் மோதல் இல்லை. ஆனால், தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக இந்த மோதலை உருவாக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என்று அவர் பேசினார்.

கூட்டத்தில், சரத்பவார் பேசியதாவது:-

டெல்லி எல்லையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு உறுதி அளித்தது. ஆனால் அப்படி செய்யவில்லை.மத்திய அரசை கண்டித்து விவசாயிகளும், இளைஞர்களும் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு தற்கொலை தீர்வு அல்ல. மத்தியில் உள்ள அரசை மாற்றுவதுதான் அதற்கு உண்மையான தீர்வு. 2024-ம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட அனைவரும் பாடுபட வேண்டிய தருணம் வந்து விட்டது என்று அவர் பேசினார்.

மேலும் செய்திகள்