ராமர் கோவில் கும்பாபிஷேகம்: ஊடகங்கள், சமூக ஊடகங்களுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்
|ராமர் கோவில் நிகழ்ச்சி தொடர்பாக சிலர் மத நல்லிணக்கத்தையும், சட்டம் ஒழுங்கையும் சீர்குலைக்கும் வகையில் போலியான செய்திகளை பரப்புகின்றனர்.
புதுடெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வருகிற 22-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த கோவிலின் சிறப்பு, கட்டுமான பணிகள், விழா ஏற்பாடுகள், பக்தர்களின் காணிக்கை தொடர்பான பல்வேறு நேர்மறையான செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. அதேசமயம், பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் எதிர்மறையான மற்றும் தவறான தகவல்களையும் சிலர் பரப்புகின்றனர்.
இந்நிலையில், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தலை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக சிலர் மத நல்லிணக்கத்தையும், சட்டம் ஒழுங்கையும் சீர்குலைக்கும் வகையில் சரிபார்க்கப்படாத, ஆத்திரமூட்டும் மற்றும் போலியான செய்திகளை பரப்புகின்றனர். குறிப்பாக சமூக ஊடகங்களில் இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன.
நாளிதழ்கள், தனியார் தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியாவில் செய்திகளை வெளியிடுவோர், தவறான, சித்தரிக்கப்பட்ட அல்லது நாட்டில் மத நல்லிணக்கம் அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கக்கூடிய தகவல்களை வெளியிடுவதை தவிர்க்கவேண்டும். மேலும், சமூக ஊடகத் தளங்களும் அத்தகைய தகவல்களை வெளியிடுவதை அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.