< Back
தேசிய செய்திகள்
இறக்குமதி வரி குறைப்பு; பட்ஜெட்டில் அறிவிப்பு:  தங்கம், வெள்ளி, செல்போன் பிரியர்கள் மகிழ்ச்சி...
தேசிய செய்திகள்

இறக்குமதி வரி குறைப்பு; பட்ஜெட்டில் அறிவிப்பு: தங்கம், வெள்ளி, செல்போன் பிரியர்கள் மகிழ்ச்சி...

தினத்தந்தி
|
23 July 2024 1:12 PM IST

செல்போன், செல்போன் உதிரி பாகங்களின் வரி குறைக்கப்படுகிறது. இதன்படி, இவற்றின் இறக்குமதி வரி 15 சதவீதம் ஆக குறைக்கப்படும்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் சில பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இதேபோன்று நடப்பு நிதியாண்டில், நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ள ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பட்ஜெட் உரையின்படி, தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றிற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் ஆக குறைக்கப்படும். இதேபோன்று, பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து வரி 6.4 சதவீதம் ஆக குறைக்கப்படும்.

செல்போன், செல்போன் உதிரி பாகங்களின் வரியும் குறைக்கப்படும். இதன்படி, இவற்றின் இறக்குமதி வரி 15 சதவீதம் ஆக குறைக்கப்படும். இதனால், புது வரவு செல்போன்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இது பார்க்கப்படுகிறது. சில குறிப்பிட்ட தோல் பொருட்களுக்கான வரி விதிப்புகளும் குறைக்கப்படும்.

மருத்துவ உபகரணங்கள், சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சூரிய ஒளி மின்சாரத்திற்கு பயன்படும் கருவிகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. எனினும், பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படும்.

விண்வெளி, பாதுகாப்பு, தொலைத்தொடர்பில் 25 முக்கிய தாது பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 2 பொருட்களுக்கு வரி குறைக்கப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதம் என்ற அளவில் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்