பரபரப்பான அரசியல் சூழலில் பட்னாவிஸ்- ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு?
|பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிசும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமை தாக்கும் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய கட்சி ஆதரவு
சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.களுடன் ஆளும் மகாவிகாஸ் கூட்டணிக்கு எதிராக அசாம் மாநிலம் கவுகாத்தியில் முகாமிட்டு உள்ளார். சிவசேனாவில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை என அந்த கட்சியின் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியிருந்தார். அதே நேரத்தில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பேசும் வீடியோவில், அவருக்கு பலம்வாய்ந்த தேசிய கட்சியின் ஆதரவு இருப்பதாக கூறினார்.
சந்திப்பில் அமித்ஷா
இந்தநிலையில் நேற்று அதிகாலை குஜராத் மாநிலம் வதோதராவில் ஏக்நாத் ஷிண்டே, பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மும்பையில் இருந்து இந்தூர் சென்று, அங்கு இருந்து வதோதரா சென்றதாக கூறப்படுகிறது.
இதேபோல ஏக்நாத் ஷிண்டே கவுகாத்தியில் இருந்து டெல்லி வழியாக வதோதரா சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின் போது உள்துறை மந்திரி அமித்ஷா இருந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.