சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள டிரைவரை மீட்க ரூ.34 கோடி நிதி திரட்டிய மக்கள் - நெகிழ்ச்சி சம்பவம்
|சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த இந்தியரை மீட்பதற்காக ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பெரோக் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் சவுதி அரேபியாவில், தனது முதலாளியின் மாற்றுத் திறனாளி மகனை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கோழிக்கோட்டில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த அப்துல் ரஹீம், கடந்த 2006ம் ஆண்டு தனது 20வது வயதில் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு குடும்பத்தினரிடம் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அதே ஆண்டில் அக்குடும்பத்தினருடன், அப்துல் ரஹீமுக்கு பிரச்சினை ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கைகலப்பில், முதலாளியின் மாற்றுத்திறனாளி மகனின் உடலில் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் கருவி துண்டிக்கப்பட்டு அந்த மாற்றுத்திறனாளி சிறுவன் உயிரிழந்தான்.
இந்த பிரச்சினையில் அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இந்நிலையில் அச்சிறுவனின் இறப்புக்கு ஈடாக இந்திய மதிப்பில் ரூ.34 கோடி பெற்றுக் கொள்ள சிறுவனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இந்த நிதியை அளித்தால் அப்துல் ரஹீம் விடுதலை செய்யப்படும் வாய்ப்பு ஏற்படும்.
இதையடுத்து நிதி திரட்டுவதற்காக அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஓர் அமைப்பை உருவாக்கினர். அவர்கள், குழந்தையின் மரணம் தற்செயலான ஒன்று என்றும் அது வேண்டுமென்றே நடத்தப்பட்டது அல்ல என்றும் கூறி நிதி திரட்ட ஆரம்பித்தனர்.
இதற்காக 'சேவ் அப்துல் ரஹிம்' என்ற செல்போன் செயலியையும் நிறுவி கூட்டு நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்டனர். சவுதியில் உள்ள அப்துல் ரஹீமின் நண்பர்களும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் நிதி அளித்தனர். இந்நிலையில் கடந்த வாரம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி ரூ.34 கோடிக்கும் கூடுதலாகவே நிதி வந்தடைந்தது.
இந்நிலையில், அப்துல் ரஹீமின் தாயார் பாத்திமா கூறுகையில், "18 ஆண்டுகளுக்குப் பிறகு எனது மகன் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்றார்.
இதற்கிடையே, அப்துல் ரஹீமின் குடும்பத்தினரை கேரள பொதுப்பணித்துறை மந்திரி பி.ஏ.முகமது ரியாஸ் சமீபத்தில் சந்தித்துப் பேசினார். "இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி. அரசியல், மதங்களை துண்டித்து, ரஹீமின் விடுதலைக்காக மக்கள் தங்கள் பங்களிப்பை அளித்தனர்" என்றார்.