இந்திய மாலுமிகள் விவகாரத்தில் உதவிசெய்ய தயார் - நைஜீரியா அறிவிப்பு
|சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மாலுமிகள் விவகாரத்தில் உதவிசெய்ய தயாராக இருப்பதாக நைஜீரியா அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய மாலுமிகள் 16 பேர் உள்பட 26 பேருடன் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று கடந்த ஆகஸ்டு 12-ந்தேதி மத்திய ஆப்பிரிக்க நாடான இகுவாடரியல் கினியா கடற்பகுதியில் சிறை பிடிக்கப்பட்டது.
எண்ணெய் திருட்டில் ஈடுபட்டதாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 3 மாதங்களாக அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள மாலுமிகள், தற்போது அண்டை நாடான நைஜீரியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கு சிறை வைக்கப்பட்டு உள்ளனர். இந்த மாலுமிகளை மீட்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் இந்திய மாலுமிகள் விவகாரத்தில் உதவிட தயார் என நைஜீரியா அறிவித்து உள்ளது. டெல்லியில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்ற அந்த நாட்டு உள்துறை மந்திரி ஆக்பெனி ரவுப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'மாலுமிகள் விடுதலை விவகாரத்தில் இந்திய அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்த பிரச்சினையைத் தீர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்று அனைத்து இந்தியர்களுக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம்' என்று தெரிவித்தார்.