10 நிமிடம் தாமதமாக பணிக்கு வந்தால் அரைநாள் விடுப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 'கிடுக்கிப்பிடி'
|மத்திய அரசு பணியாளர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்து விட வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக பிரதமராக பதவியேற்றதைத் தொடர்ந்து ஆட்சி நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் அரசு ஊழியர்களின் பணி ஈடுபாடு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையும் அடங்கும்.
அதற்கு முன்புவரை மத்திய அரசு ஊழியர்கள் பணிக்கு வரும் நேரத்தில் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் 2014-க்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காலையில் உரிய நேரத்தில் அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும், மதியநேர உணவு இடைவேளை நேரத்தை அதிகமாக எடுக்கக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை முறைப்படுத்த பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு கொண்டு வரப்பட்டது. அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இவை தீவிரமாக நடைமுறையில் இருந்த நேரத்தில் கொரோனா தொற்று பரவியது. இதனால் இந்த நடைமுறையில் கொஞ்சம் தளர்வுகள் ஏற்பட்டன. அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை இந்த தளர்வை சாதகமாக்கிக் கொண்டனர்.
இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் பணிகள் ஒழுங்காக நடைபெறவில்லை என ரகசிய தகவல்கள் மத்திய அரசுக்கு சென்றன. குறிப்பாக ஊழியர்களின் காலைநேர வருகை என்பது மிகவும் தாமதமாக உள்ளது என புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே இதை சரிசெய்ய மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. அதன்படி மத்திய அரசு பணியாளர்கள் காலை 9.15 மணிக்குள் (வழக்கமான அலுவல் நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை) அலுவலகத்துக்கு வந்து விட வேண்டும் என 'கிடுக்கிப்பிடி' உத்தரவு போடப்பட்டு உள்ளது.
காலை 9.15 மணிக்கு பிறகு தாமதமாக அலுவலகம் வந்தால் அவர்களுக்கு அரைநாள் விடுப்பு கட்டாயம் ஆக்கப்படும். பணிக்கு தாமதமாக வருவது தெரிய வந்தால் அதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவித்து, சாதாரண விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதைப்போல முன்கூட்டியே அலுவலகத்தை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு அனைத்து அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கையாக சென்றிருக்கிறது.
இந்த சுற்றறிக்கையால், தாமதமாக வரும் மத்திய அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஊழியர்களாக இருந்தாலும் சரி, அதிகாரிகளாக இருந்தாலும் சரி அலுவலக நேரத்தையும் தாண்டி வேலை செய்வதாகவும், விடுமுறை நாட்களில் கூட கோப்புகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று வேலை செய்வதாகவும் வாதிட்டு வருகிறார்கள். ஆனாலும் உத்தரவில் மத்திய அரசு கடுமையாக இருப்பதாக கூறப்படுகிறது.