பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் ரூ.14 கோடியில் சீரமைக்கப்பட்ட சாலைகளில் மீண்டும் பள்ளம்
|பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் ரூ.14 கோடியில் சீரமைக்கப்பட்ட சாலைகளில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
ரூ.14 கோடி செலவில் சாலை
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ந் தேதி பெங்களூருவுக்கு வருகை தந்திருந்தார். பெங்களூரு கெங்கேரி அருகே கொம்மகட்டா, ஞானபாரதியில் உள்ள பெங்களூரு பல்லைக்கழகம், இந்திய அறிவியல் மையத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு இருந்தார். பிரதமர் வருகையையொட்டி, அவர் சாலை மார்க்கமாக சென்ற பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்பட்டது. ரூ.14 கோடி செலவில் தார் சாலை போடப்பட்டு இருந்தது.
இதற்காக மாநகராட்சி நிதியையும் ஒதுக்கி, அந்த பணிகளை மேற்கொண்டு இருந்தது. இந்த நிலையில், பிரதமர் வருகையையொட்டி பெங்களூருவில் சீரமைக்கப்பட்ட சாலைகளில் மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழிகள் வழியாக செல்ல வாகனஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறது.
சாலைகளில் பள்ளங்கள்
பெங்களூரு பல்கலைக்கழகம் முன்பாக உள்ள சாலை, பல்கலைக்கழகத்தில் இருந்து மரியப்பன பாளையாவுக்கு செல்லும் சாலை, கொம்மகட்டாவை சுற்றியுள்ள சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. சாலைகள் உண்டான பள்ளங்களை உடனடியாக ஒப்பந்ததாரர்கள் தார் ஊற்றி உள்ளனர். ஆனாலும் அந்த தாரும் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரூ.14 கோடி செலவில் அமைக்கப்பட்ட சாலை பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.
இந்த நிலையில், பெங்களூருவில் புதிதாக போடப்பட்ட சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு இருப்பது பற்றிய தகவல் பிரதமர் அலுவலகத்திற்கும் சென்றிருந்தது. இதையடுத்து, புதிதாக போடப்பட்ட சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கும்படி, கர்நாடக அரசுக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் பற்றி உரிய விளக்கம் தரும்படி, பெங்களூரு மாநராட்சிக்கு கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.